/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நம் மேலேயே நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்!
/
நம் மேலேயே நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்!
PUBLISHED ON : ஆக 08, 2025 12:00 AM

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நெடுஞ்சாலையில் உள்ள கஞ்சனுாரில் செயல்படும், 'கே.ரேணு அம்மா' ஹோட்டல் உரிமையாளர் மகேஸ்வரி:
நான் கிராமத்து பொண்ணு. நர்சிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், பள்ளி படிப்பு முடித்ததும், திருமணம் செய்து வைத்து விட்டனர்.
வீட்டில் எப்போதும் வறுமை தான். அதனால், 'நமக்கு தான் ஓரளவுக்கு சமைக்க தெரியுமே... அதையே தொழிலாக மாற்றினால் என்ன' என்று தோன்றியது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கி, சிறிய சாப்பாட்டு கடை ஒன்றை துவக்கினேன். கடைக்கு அம்மாவின் பெயரான, 'கே.ரேணு அம்மா' பெயரை அப்படியே வைத்து விட்டேன்.
சமையல் மாஸ்டரிடம், 'அண்ணே... ஒரு மாதம் மட்டும் எனக்கு சமையல் கற்றுக் கொடுங்கள். அடுத்த மாதத்தில் இருந்து நானே எல்லாவற்றையும் செய்து விடுகிறேன். ஏனெனில், உங்களுக்கு சம்பளம் கொடுக்குற அளவுக்கு கூட என்னிடம் பணமில்லை' என்று கூறினேன்.
அவரும், 'அதனால் என்னம்மா... கற்றுக் கொண்டு நீயே ஜோரா செய்' என ஊக்கமளித்து, அனைத்து வேலைகளையும் சொல்லி கொடுத்து விட்டு சென்றார்.
அதுவரை என் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே சமைத்த நான், இப்போது மாஸ்டராக போறேன்னு நினைத்தபடியே, வேலைகளை கவனமுடன் கற்றுக் கொண்டேன். ஒரு மாதத்திற்கு பின், நானே கரண்டி பிடிக்க ஆரம்பித்து விட்டேன்.
தொழில் ஆரம்பித்த புதிதில் பெரிய வருமானம் இல்லை. ஒவ்வொரு ரூபாயையும் பார்த்து பார்த்து செலவு செய்தேன். ஒரு கட்டத்தில் நிலையான எண்ணிக்கையில், வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர்.
அதிகாலை, 4:00 மணிக்கு வேலையை ஆரம்பிப்பேன். 6:30 மணிக்கு ஹோட்டலை திறந்து விடுவேன். பிள்ளைகளுக்கு தனியாக சமைத்து, டிபன் பாக்சில் கட்டி, பள்ளிக்கு அனுப்பி விடுவேன்.
காலை இட்லி, வடை, தோசை, பூரி, மதியம் சாப்பாடு, கலவை சாதம் என, பரபரன்னு வேலை பார்ப்பேன். கணவர் பால் வியாபாரம் செய்தபடியே எனக்கும் உதவி செய்வார்.
தற்போது தினமும், 9,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. என் வாழ்க்கையில் ஒருநாள் நான் துணிச்சலாக எடுத்த முடிவு, இப்போது என் வாழ்க்கையையே மாற்றி உள்ளது.
'நம்ம ஹோட்டலை பெருசாக்கணும்; நாலு பேருக்கு வேலை கொடுக்கிற அளவுக்கு வளரணும்'னு சொன்னா, 'ஓவரா தான் நெனைப்பு' என்று சொல்றவங்களும் இருக்கத்தான் செய்வாங்க.
உடனே நாமும், 'நமக்கு அதெல்லாம் சரியாக வராதோ'ன்னு அவங்க சொன்ன வார்த்தைகளை நம்பக்கூடாது. நம்மால் எதுவும் முடியும்னு, நம் மேலேயே நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

