/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சங்கடப்படும்படி குடும்பத்தில் யாரும் நடந்து கொள்ளவில்லை!
/
சங்கடப்படும்படி குடும்பத்தில் யாரும் நடந்து கொள்ளவில்லை!
சங்கடப்படும்படி குடும்பத்தில் யாரும் நடந்து கொள்ளவில்லை!
சங்கடப்படும்படி குடும்பத்தில் யாரும் நடந்து கொள்ளவில்லை!
PUBLISHED ON : பிப் 06, 2024 12:00 AM

ஆணாக இருந்து பெண்ணாக மாறி, பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகிக்கும் சம்யுக்தா விஜயன்: இந்தியாவில் ஒரு ஆண் அல்லது பெண், திருநம்பியாக மாறினால் கேலி, கிண்டல், ஏளனம், புலம்பல்னு சுற்றமும், சமூகமும் அந்த நபரை வேதனைக்குழிக்குள் தள்ளும்.
இதுவே, அமெரிக்காவாக இருந்தால், கைகுலுக்கி, அரவணைப்பர். கடந்த, 2016ல் அமெரிக்காவில் வசித்தேன்.
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, கம்பெனிக்கு பெண்ணாக சென்றேன்; சக பணியாளர்கள் கண்ணியமாக என்னை வரவேற்றனர். பொள்ளாச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட நான், முன்னோடி திருநங்கை.
அமேசான் மற்றும் ஸ்விகி நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை வகிக்கிறேன், 'கூபாங்' எனும் இ - காமர்ஸ் நிறுவனத்தின் அமெரிக்கக் கிளையில், முதன்மை தொழில்நுட்ப திட்ட மேலாளராகப் பணியாற்றுகிறேன்.
கல்வி மற்றும் திறமையால் தலைநிமிர்ந்த நான், நீல நிறச் சூரியன் எனும் திரைப்படத்தின் வாயிலாக, சினிமா இயக்குனராகவும், நடிகையாகவும் அவதாரம் எடுத்திருக்கிறேன்.
இத்திரைப்படம், அமெரிக்காவின் சியாட்டில், 2023ம் ஆண்டுக்கான 'டஸ்வீர்' தென் ஆசிய திரைப்பட விழாவில், தேர்வு குழுவின் சிறந்த, 'பியூச்சர் பிலிம்' விருதைப் பெற்றது.
கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியத் திரைப்படங்களுக்கான பனோரமா பிரிவிலும் இடம்பெற்றது.
அமெரிக்காவில், தனி மனிதர்களுக்கான உரிமைகள் நிறைய இருக்கின்றன. பாலினத்தை பொறுத்து, அவர்கள் வேலை, வளர்ச்சி, வாழ்க்கை என எதுவுமே பாதிக்கப்படாது. இதே சூழல் இந்தியாவில் இருந்திருந்தால், நான் வெளிநாட்டில் குடியேறி இருக்க மாட்டேன்.
சிறு வயதில் என் விருப்பத்தைப் புரிந்து, அம்மா என்னை பரத நாட்டியம் கற்றுக் கொள்ள அனுப்பினார். அப்பா டெய்லர்; அரங்கேற்றத்திற்கும், நடன நிகழ்ச்சிகளுக்கும் அவர் தான் பிளவுஸ் தைத்துக் கொடுப்பார்.
குடும்பத்தில் ஒருவர் கூட நான் சங்கடப்படும்படி நடந்து கொண்டதில்லை. 'உனக்கு என்ன பிடிக்குமோ, எது இஷ்டமோ அதைச் சரியாக செய்' என்று தான் கூறுவர். இந்த அணுகுமுறை தான், இவ்வளவு துாரம் நம்பிக்கையுடன் உயர உதவியது.
பாலின மாறுபாட்டுடன் வளரும் பிள்ளைகளை, 'குடும்ப மானத்தை வாங்கிட்டியே'னு பெரும்பாலான பெற்றோர் கேவலமாக திட்டுறாங்க.
'இந்த மாற்றம் இயற்கையானது'ங்கிற தெளிவு எல்லாருக்கும் வந்தாலே, 'மூன்றாம் பாலினத்தவர்'ங்கிற வேறுபாடு இந்தியாவிலும் இல்லாமல் போகும்.
என்னை மாதிரியான பிள்ளை, உங்கள் வீட்டில், குடும்பத்தில், கல்வி நிலையங்களில், அலுவலகத்தில் இருந்தால் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வீர்களா? இதற்கு நீங்கள் கூறும் பதிலில் தான், எங்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்கான சுதந்திரமும் பிறக்கும்.

