/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'க்யூப்' வாயிலாக நிறைய விஷயங்கள் சாதிக்கலாம்!
/
'க்யூப்' வாயிலாக நிறைய விஷயங்கள் சாதிக்கலாம்!
PUBLISHED ON : பிப் 28, 2024 12:00 AM

'தமிழ் நாடு க்யூப் அசோசியேஷனை' துவங்கி, உலகளவில் இன்று பலருக்கும், 'க்யூப்' பயிற்சியாளராக இருந்து வரும், சென்னையைச் சேர்ந்த சந்திரிகா:
என்னோட 9 வயதில் பரிசாக ஒரு க்யூப் கிடைத்தது. அதை சரியாக பொருத்த போராடிக் கொண்டு இருந்தேன். ஒருவழியாக, ஒருபக்கம் இருந்த நிறங்களை மட்டும் ஒன்று சேர்த்து விட்டேன். ஆனால், அடுத்த முறையும் போராட வேண்டியிருந்தது.
என்னோட ஒவ்வொரு ஸ்டெப்பையும் நோட்டில் குறித்து வைத்தேன். அடுத்த முறை அந்த ஸ்டெப்சை பயன்படுத்தி, சுலபமாக நிறங்களை ஒன்று சேர்க்க முடிந்தது. அதனால் நானே ரூல்சை உருவாக்கினேன்.
நமக்கு தெரிந்தது கன சதுர வடிவில் இருக்குற, க்யூப் மட்டும் தான். ஆனால், பாம்பு வடிவம், டூ பை டூ க்யூப் என்று, 2,500க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு.
இதில் எனக்கிருந்த ஆர்வத்தை பார்த்த சித்தி, வெளிநாட்டில் இருந்து எனக்கு வித்தியாசமான க்யூப்களை வாங்கித் தந்தாங்க. இப்போது இந்தியாவிலேயே, 300 வகையான க்யூப்ஸ் கிடைக்கின்றன.
பி.காம்., படித்து முடித்து, ஒரு ப்ளே ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்போது, என் மாணவர்களுக்கு க்யூப் சொல்லிக் கொடுக்க துவங்கினேன்.
அவர்கள் அதை வீட்டில் முயற்சி செய்தனர். அதனால், 'மொபைல் போன், 'டிவி' பார்க்கும் நேரம் குறைந்தது. அதைப் பார்த்து விட்டு, அவர்கள் பெற்றோர் எனக்கு நன்றி கூறினர்.
சீனாவில் இதற்காக பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர் என்று கேள்விப்பட்டு, அவர்களை தொடர்பு கொண்டு, என்ன சொல்லிக் கொடுப்பர், எப்படி சொல்லிக் கொடுப்பர் போன்ற விபரங்களை தெரிந்து, வகுப்புகள் எடுக்க துவங்கினேன்.
என்னிடம் பயிற்சிக்கு வந்த மாணவர்களை கின்னஸ் சாதனைக்கு தயார்படுத்தினேன். மாநில அளவில், தேசிய அளவில் க்யூபில் சாதனைகள் செய்ய வைத்தேன். 2018ல், 'தமிழ்நாடு க்யூப் அசோசியேஷ'னை முறையாக பதிவு செய்தேன்.
சீனா, ரஷ்யா உட்பட பல நாடுகளில் இதற்கென பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால், தமிழகத்தில் மட்டுமே கியூபை ஒரு விளையாட்டு பொருளாக பயன்படுத்துகின்றனர்.
இத்தனை முயற்சி களுக்கு பின், மக்களின் கவனம் எங்கள் பக்கம் திரும்பியது. 'கொரோனா' தொற்று காலத்தில் பல நாடுகளில் இருந்தும், 'ஆன்லைன்' வாயிலாக பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
இதுவரை, 28 குழந்தைகள் உலக சாதனைகளும், 17 குழந்தைகள் தேசிய அளவிலான சாதனைகளும் செய்திருக்கின்றனர். தற்போது பல சிறப்பு குழந்தைகளுக்கும் பயிற்சிகள் கொடுக்கிறேன்.
'க்யூப்' வாயிலாக, நிறைய விஷயங்களை சாதிக்கலாம் என்று, இத்தனை ஆண்டு போராட்டத்துக்கு பின் புரிய வைத்திருக்கிறேன்.
என்னுடைய பெரிய கனவு தற்போது நனவானதில் மிகவும் மகிழ்ச்சி.

