/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இதுவரை 54 மேடைகளில் பாடியுள்ளேன்!
/
இதுவரை 54 மேடைகளில் பாடியுள்ளேன்!
PUBLISHED ON : அக் 25, 2024 12:00 AM

மேடை கச்சேரியில் பக்தி பாடல்கள் பாடி அசத்தும், சென்னை போரூரைச் சேர்ந்த, 8 வயது சிறுமி தியா: நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். எங்கள் வீட்டில் எல்லாருக்கும் தமிழ் பேச்சாளர்களின் ஆடியோ கேட்பது பிடிக்கும். அதனால், சிறு வயது முதலே எனக்கும் ஆன்மிக ஆடியோ கேட்பது பழகி, பிடித்து விட்டது.
தேச மங்கையர்க்கரசி அம்மா, சுகி சிவம் தாத்தா பேச்செல்லாம் கேட்கும்போது, எனக்கும் அதே மாதிரி பேசணும், பாடணும் என்று ஆசை வந்தது.
அதனால், என் பாட்டி தினமும் பக்தி பாடல்களை பாடி, அதன் அர்த்தத்தையும் சொல்லிக் கொடுப்பாங்க.
பாட்டுக்கான ஏற்ற, இறக்கங்களை அம்மா சொல்லிக் கொடுப்பாங்க. நான், 3 வயதில் பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். 'முத்தைத்தரு பத்தித் திருநகை...' பாட்டு தான் முதன் முதலாக கற்றுக் கொண்டேன்.
கோவிலுக்கு செல்லும்போதெல்லாம், சுவாமி சன்னிதி முன் நின்று, எனக்கு தெரிந்த பாடல்களை சத்தமாக பாடுவேன். அனைவரும் திரும்பி பார்த்து, 'சின்ன பொண்ணு சூப்பராக பாடுது' என்று சொல்வர். அது, எனக்கு உற்சாகமாக இருக்கும்.
நான் கோவிலில் பாடுவதை பார்த்து விட்டு, மதுரை பூங்கா முருகன் கோவிலில் வைகாசி விசாகத்துக்கு கச்சேரி செய்யும் வாய்ப்பை எனக்கு கொடுத்தனர்; அப்போது எனக்கு, 5 வயது.
என் உயரத்தைப் பார்த்து, அரங்கத்தில் இருந்தோர், 'சின்ன பொண்ணு எப்படி பாடும்?'னு கேட்டாங்க. ஆனால், என் குரலை கேட்டு அதிர்ச்சியாகிட்டாங்க. கச்சேரி முடிவில், என்னை வெகுவாக பாராட்டினர்.
நான் எப்போது கச்சேரி செய்தாலும், மேடைக்கு கீழே அம்மாவும், பாட்டியும் நிற்பர். கச்சேரி முடித்ததும் அவர்கள் சூப்பர் என்று சொல்லிவிட்டால், எனக்கு ஜாலி தான்.
ஒவ்வொரு கச்சேரிக்கு பின்னும் தாத்தா - பாட்டி எனக்கு ஒரு, 'சர்ப்ரைஸ் கிப்ட்' கொடுப்பாங்க; அது இன்னும் ஜாலி.
கந்தர் அலங்காரம், திருப்புகழ், தேவாரம், திருவாசகம், கந்த சஷ்டி கவசம், கந்த புராணம் எல்லாம் தெரியும். இன்னும் பல பாடல்களை கற்று வருகிறேன்.
தினமும் பள்ளி விட்டு வந்ததும், வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு, பாட்டியிடம் பாட்டு கற்றுக் கொள்வேன். சாப்பிடும் போதும், விளையாடும்போதும் ஏதாவது ஒரு பாட்டு ஸ்பீக்கரில் ஓடிக்கிட்டே இருக்கும். அப்படியே மனப்பாடம் ஆகிடும்.
இதுவரை, 54 மேடைகளில் பாடி இருக்கிறேன். அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் கச்சேரி செய்துள்ளேன். முருகனின் அறுபடை வீடுகளிலும் கச்சேரி செய்திருக்கிறேன்.
முருகன் பாட்டு மட்டுமல்லாமல் சிவன், அம்மன், பெருமாள் பாட்டு, பெருமாள் பாசுரங்களும் பாடுவேன். இன்னும் நிறைய பாடணும்; கற்றுக் கொள்ள வேண்டும்.

