PUBLISHED ON : பிப் 19, 2024 12:00 AM

கோலத்திற்கு என, சமூக வலைதளத்தில் பல பக்கங்கள் இருந்தாலும், 'முறைவாசல்' என்ற இணையபக்கம், அதிக கவனம் பெற்றது. காரணம், அதை நிர்வகிப்பது, சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரவிசங்கர் என்ற இளைஞர். கோலத்துடனான தன் தொடர்பு பற்றி அவர் கூறுகிறார்:
நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில் உள்ள திருவொற்றியூரில்... அம்மா தினமும், இரு வேளையும் வாசல் தெளித்து கோலம் போடுவார்.
அதிலும், குறிப்பாக, மார்கழி மாதங்களில் எங்கள் தெருவில் உள்ள அனைத்து வீடுகளின் வாசல்களிலும் கோலங்கள் சிரிக்கும். என் பாட்டியும் நன்றாக கோலம் போடுவார். இவற்றை பார்த்தே வளர்ந்ததால், எனக்கும் கோலத்தின் மேல் இயல்பாக ஈர்ப்பு வந்தது.
கோலம் என்பது ஒரு, 'ஆர்ட்,' கலைக்கு ஆண் - பெண் வித்தியாசம் கிடையாது என்பதால், பல கோலங்களை பழகி, என் ஆர்வத்தை மெருகேற்றிக் கொண்டேன்.
படிப்பு, சாப்ட்வேர் வேலை என்று காலங்கள் ஓடினாலும், கோலம் மீதான என் காதல் மட்டும் குறையவே இல்லை. கொரோனா தொற்று காலத்தில், வீட்டில் இருந்து பணிபுரியும் சூழல் வந்தது.
அப்போது மீண்டும் கோலத்தை கையில் எடுத்தேன். மொட்டை மாடியையே என் களமாக்கினேன். அப்போது வந்த வெள்ளிக் கிழமைகள், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில், வீட்டின் மொட்டை மாடியில் நீர் தெளித்து கோலம் போடத் துவங்கினேன்.
பின், 'முறைவாசல்' என்ற, 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் பக்கத்தைத் துவங்கினேன். அதில், என் கோல புகைப்படங்களை பதிவேற்றத் துவங்கினேன்.
சிறிது, சிறிதாக என் கோலங்களுக்கு வரவேற்பு கிடைக்கத் துவங்கியதால், நான் கோலம் போடும், 'வீடியோ'வையும் பதிவிட ஆரம்பித்தேன்.
அதன்பின், அதை பார்ப்பவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில், எளிமையான, சிறிய சிறிய கோலங்களைப் போட்டு, அவற்றின் வீடியோக்களை பதிவிட துவங்கினேன்.
இன்னொரு பக்கம், 'பாத்திரக் கடை' என்ற பெயரில், பாரம்பரிய பொருட்களுக்கான, 'ஆன்லைன்' வணிகத்தையும் நடத்தி வருகிறேன்.
இந்தியா முழுதும் கோலம் என்ற கலை, வெவ்வேறு வடிவங்களில் இருந்து வருகிறது. உதாரணமாக, வங்காளத்தில், 'அல்போனா ஆர்ட்' என்ற, 'ரங்கோலி' போன்ற ஒரு கலை வடிவம் இருக்கிறது.
இது போன்ற மற்ற கலை வடிவங்களையும் வரைய வேண்டும். மேலும், இதுவரை நான் போட்ட கோலங்களைக் கொண்டு, 'காபி டேபிள் புக்' ஒன்றை, 'பிரின்ட்' செய்ய வேண்டும்.
கோலம் போட்டு முடிக்கும் போது உண்டாகும் நிறை உணர்வு, அன்றைய நாளையே அழகாக்கி விடும். இது என் அனுபவ உண்மை!

