PUBLISHED ON : ஜூன் 20, 2026 12:43 AM

இந்தியாவின் பல பகுதிகளில் விளைவிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து, விதைகளை பரவலாக்கம் செய்து வரும், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், மேலகாசாகுடி கிராமத்தை சேர்ந்த, 55 வயதாகும் பாஸ்கர்: எங்களுடையது விவசாயக் குடும்பம். பி.காம்., முடித்து விட்டு, சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன்.
கடந்த 1998ம் ஆண்டு மீண்டும் ஊருக்கே வந்து விவசாயத்தில் இறங்கினேன். ஆரம்பத்தில், ரசாயன உரங்களை பயன்படுத்தினேன்.
அதன்பின், புதுச்சேரி ஆத்மா குழுவின் வழிகாட்டுதலில், அரை ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். நல்ல விளைச்சல் கிடைத்ததால், இப்போது, 18 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.
விதை நெல் உற்பத்திக்காக, 8 ஏக்கரில் 1,200க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்கிறேன். ஒன்பது ஆண்டுகளுக்கு முன், அரிதான பாரம்பரிய நெல் ரகங்களை தேடி பயணிக்க ஆரம்பித்தேன். தமிழகத்தில் எந்த ஊரில் நெல் திருவிழா நடந்தாலும் சென்று விடுவேன்.
நான் தேடக்கூடிய அரிதான விதை நெல் கிடைத்தால், எவ்வளவு விலை சொன்னாலும் வாங்கி விடுவேன்.
தமிழகம் மட்டுமல்லாமல் மணிப்பூர், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களிலும், இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் பாரம்பரிய நெல் ரகங்களையும் சேகரித்து வைத்துள்ளேன்.
தரமான விதை நெல்லை உற்பத்தி செய்து பரவலாக்கம் செய்ய வேண்டும் என்பதே என் முதன்மையான நோக்கம். இதில், வருமானத்தை எதிர்பார்க்கவில்லை. அரிதான, பாரம்பரிய ரக விதை நெல்லை கிலோ, 300 ரூபாய் வரை கூட சிலர் விற்பனை செய்கின்றனர்.
நானே அதிக விலை கொடுத்து தான், பல ரகங்களின் விதை நெல்லை வாங்கி சேமித்து வைத்துள்ளேன். ஆனால், நான் உற்பத்தி செய்யக்கூடிய விதை நெல்லை, கிலோ 70 ரூபாய்க்கு தான் விற்பனை செய்கிறேன்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள், வேளாண் மாணவர்கள், வேளாண் துறை அலுவலர்கள் என பலரும் என் வயலை வந்து பார்வையிடுகின்றனர். இதனால், விதை பரவலாக்கம் சுலபமாகிறது.
தற்போது, 10 ஏக்கர் பரப்பில், 10 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்கிறேன். ஏக்கருக்கு 1,500 கிலோ நெல் அறுவடையாகும். அதை அரிசியாக அரைத்தால், 900 கிலோ கிடைக்கும்.
கிலோ, 90 ரூபாய் என விற்பனை செய்கிறேன். 900 கிலோ அரிசி விற்பனை வாயிலாக, ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 81,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எல்லா செலவுகளும் போக, ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபாய் லாபம் வீதம், 10 ஏக்கருக்கு 4 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு
94435 73530
