/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நாம் இறந்தாலும் பரவாயில்லைன்னு சிறுவனை காப்பாற்றினேன்!
/
நாம் இறந்தாலும் பரவாயில்லைன்னு சிறுவனை காப்பாற்றினேன்!
நாம் இறந்தாலும் பரவாயில்லைன்னு சிறுவனை காப்பாற்றினேன்!
நாம் இறந்தாலும் பரவாயில்லைன்னு சிறுவனை காப்பாற்றினேன்!
PUBLISHED ON : மே 10, 2025 12:00 AM

சென்னை அரும்பாக்கத்தில் சமீபத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின் கசிவு ஏற்பட்டு, நடந்து சென்று சிறுவன் ஜேடன் ரயன் மீது மின்சாரம் பாய்ந்தது. அந்த சூழலில் தன் உயிரை பற்றி துளியும் யோசிக்காமல், தண்ணீரில் இறங்கி சிறுவனை காப்பாற்றிய கண்ணன்:
கண்ணன்: பெற்றோர் இருவருமே விவசாய கூலிகள். வீட்டுக்கு ஒரே மகன் நான். அம்மா இதய நோயாளி. அவரின் மருத்துவ செலவுகளுக்கு நான் மட்டுமே உழைக்க வேண்டிய சூழல். பாலிடெக்னிக் படித்துள்ளேன். அன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்.
அப்போது, சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து, தண்ணீருக்குள் துடித்து கொண்டிருந்தான். 'சிறுவன் வாழ வேண்டிய வயது. அதனால், நாம் இறந்தாலும் பரவாயில்லை... சிறுவனை காப்பாற்ற வேண்டும்' என்று துணிவுடன் துாக்கினேன்.
மின்சாரம் தாக்கினால், எவ்வாறு முதலுதவி செய்யணும் என்பதை சமூக வலைதளத்தில் பார்த்துள்ளேன். தம்பி விழித்துக் கொண்டான்; ஆனால், மூச்சு வாங்குவது மட்டும் அப்படியே இருந்ததால், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.
தகவலறிந்து பலரும் பாராட்டினர். காவல் துறை அதிகாரி சுப்புலட்சுமி மேடம் போன் செய்து பாராட்டினார். துப்புரவு தொழிலாளர்கள் கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்தியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
அம்மா போன் செய்து, 'எங்களுக்கு ஒத்த புள்ளையாக இருந்தாலும், அந்த சிறுவனை காப்பாற்றியது தான் ரொம்ப சந்தோஷம்' என்று சொன்னாங்க.
சிறுவனின் தந்தை ராபர்ட்: வானகரத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறேன். எனக்கு இரு குழந்தைகள். ஜேடன் தான் மூத்தவன். அவன் மிகவும் கவனமாக தான் பள்ளிக்கு செல்வான். ஆனால், அன்று மழை நீர் தேங்கி அதில், 'கரன்ட் பாஸ்' ஆனதால், ஆபத்தில் சிக்க நேர்ந்தது.
அந்த பக்கமாக பைக்கில் வந்த கண்ணன், ஜேடனை காப்பாற்றி முதலுதவி கொடுத்து, பையனுக்கு விழிப்பு வந்ததும் ஒரு தம்பதியிடம் ஒப்படைத்து விட்டார்.
அவர்கள் ஹாஸ்பிட்டலில் பையனை அட்மிட் செய்து, மகனின் ஐ.டி., கார்டு பார்த்து எனக்கு தகவல் கூறினர். ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் இருந்தோம். சரியாகி விட்டது என்று டாக்டர்கள் கூறிய பின் தான், நிம்மதி ஆனோம்.
வேலை முடிந்து, மீண்டும் மருத்துவமனைக்கு வந்து பையனை பார்த்து விட்டு தான் சென்றார் கண்ணன்.
மின் வாரியத்தின் அண்ணாநகர் கோட்ட செயற்பொறியாளர் அன்பரசு: ஆபத்து காலங்களில் பொதுமக்கள் 94987 94987 எண்ணுக்கு தகவல் அளித்தால், உடனே மின் துண்டிப்பு செய்வர்.
மின் கசிவில் சிக்கியவரை மரக்கட்டை, பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற மின்சாரம் பாயாத பொருட்களை கொண்டு காப்பாற்ற வேண்டும்.
தொடர்புக்கு:
84387 18640

