PUBLISHED ON : பிப் 05, 2024 12:00 AM

மத்திய பிரதேச மாநிலம், திண்டோரிக்கு அருகிலுள்ள, 'சில்புடி' என்ற கிராமத்தில், 'பைகா' என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த லஹரி பாய்: எனக்கு 27 வயது தான் ஆகிறது.
ஆதிவாசி பெண்ணான நான், 150க்கும் மேற்பட்ட சிறுதானிய வித்துகளைப் பாதுகாத்து, 'சிறுதானியங்களின் ராணி' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறேன்.
உழவு செய்து, தானியங்களை விதைப்பதில் உடன்பாடு இல்லாதவர்கள், எங்கள் இன மக்கள். எங்களுக்குத் தாயாய் விளங்கும் பூமியைக் காயப்படுத்துவதைப் போன்ற செயல் அது என நம்பும் நாங்கள், 'ஷிப்டிங் கல்டிவேஷன்' எனும், உழவில்லா விவசாயத்தைப் பின்பற்றுகிறோம்.
மேலும், மறைந்து வரும் சிறுதானியங்களைப் பாதுகாக்க முடிவெடுத்தோம்; விவசாயிகளுக்கு விதைகளைக் கொடுத்தோம். அறுவடைக்குப் பின் அவர்களிடமிருந்து விதைகளைத் திரும்பப் பெற்றோம்.
இப்போது வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த, பல வகையான சிறுதானிய வகைகள் எங்கள் கைவசம் இருக்கின்றன.
விவசாய நுணுக்கங்களை, என் பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்டேன். எங்களுடைய நிலத்தில் அரிய வகை சிறுதானியங்களை விளைவித்து, அவற்றின் விதைகளை விவசாயிகளுக்கு கடந்த, 10 ஆண்டுகளாக வினியோகித்து வருகிறேன்.
சுற்று வட்டாரத்தில் இருக்கும், 64 கிராமங்களுக்கும் இலவசமாக சிறுதானிய விதைகளை அளிக்கிறேன். இதுவரை என் மாவட்டத்திலிருக்கும், 25 கிராமங்களில் வசிக்கும், 350 விவசாயிகளுக்கு விதைகளைக் கொடுத்திருக்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால், 'சிறுதானிய வங்கி' ஒன்றையே சத்தமில்லாமல் நடத்தி வருகிறேன்.
'லஹரியின் இந்த முயற்சியானது பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும்' என, பிரதமர் நரேந்திர மோடி என்னை வெகுவாகப் பாராட்டினார்.
வீட்டின் ஓர் அறையிலுள்ள கூரையின் மீது தானியங்களை உலர வைக்கிறேன். களிமண் தாழிகளில் விதைகளை இட்டு, அவற்றின் பெயர்களைத் தாழிகளின் மீது எழுதி வைத்திருக்கிறேன். 1 கிலோ விதைகளை விவசாயிகளுக்குக் கொடுத்தால், அவர்கள், 1.5 கிலோவாக அறுவடைக்குப் பின் திருப்பித் தரவேண்டும். என் செயல்பாடுகளால் உத்வேகம் அடைந்த, 40 பெண்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்.
வெற்றிகரமான சிறுதானிய வினியோகத்தால் உந்தப்பட்ட நான், தற்போது பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகளையும் சிறப்பாக உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வினியோகிக்கிறேன்.
இந்துாரில் நடைபெற்ற, 'ஜி 20 அக்ரி கல்சுரல் குரூப் மீட்டிங்'கின் போது, 100 பிரதிநிதிகளுடன் நான் கலந்துரையாடி உள்ளேன்!

