/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வி.ஏ.ஓ.,வாக பணியில் சேர்ந்து தனி தாசில்தாராக உயர்ந்துள்ளேன்!
/
வி.ஏ.ஓ.,வாக பணியில் சேர்ந்து தனி தாசில்தாராக உயர்ந்துள்ளேன்!
வி.ஏ.ஓ.,வாக பணியில் சேர்ந்து தனி தாசில்தாராக உயர்ந்துள்ளேன்!
வி.ஏ.ஓ.,வாக பணியில் சேர்ந்து தனி தாசில்தாராக உயர்ந்துள்ளேன்!
PUBLISHED ON : அக் 31, 2024 12:00 AM

தஞ்சை மாவட்டம், திருவையாறு தாலுகா அலுவலகத்தில், குடிமை பொருள் வழங்கல் பிரிவு தனி துணை தாசில்தாராக பணிபுரியும் பாரதி கண்ணம்மா:
எங்கப்பா மாதவன், தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகத்தில் அலுவலக உதவியாளராக இருந்தார். அங்கிருந்த பாரதியார் புத்தகங்களால் ஈர்க்கப்பட்டு, எனக்கு, 'பாரதி கண்ணம்மா' என பெயர் வைத்தார். அக்கா, நான், தம்பின்னு வீட்ல மூணு பிள்ளைங்க. என் பெரியப்பா சின்ன வயசுலேயே இறந்துட்டார். அவருக்கு நாலு பொண்ணுங்க, ஒரு பையன்.
அப்பா தான், பெரியப்பா குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறார். கூட்டுக் குடும்பமா இருந்தோம்; ஆறு பெண்கள், ரெண்டு ஆண்கள்னு எட்டு பிள்ளைகளை ஆளாக்க வேண்டிய கடமையோடு போராடினார் அப்பா.
வறுமை, என் படிப்புக்கு தடையாகி விடக்கூடாது என நான் ஆறாவது படித்தபோதே, ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தேன். முதன்முதலில் டியூஷன் பீஸ், 25 ரூபாய் கிடைத்தபோது தான், உழைப்பின் அருமை தெரிந்தது.
எங்கள் வீட்டில் கரன்ட் வசதி இல்லாததால், தெரு விளக்கில் தான் படித்தேன். கல்லுாரி படிப்பை முடித்துவிட்டு, தனியார் கம்பெனியில் வேலை பார்த்தபடியே, போட்டித் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன்.
ஆனாலும், 'படிப்பை மட்டும் பாரு' என்று சொன்னார் அப்பா. அதனால், வேலையை விட்டுட்டு, ஒரே குறியாக படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன். என் கம்மலை அடகு வைத்து, பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். ஒரு கட்டத்தில் அங்கு வகுப்பு எடுத்தபடியே, படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
அதனால், எனக்கு பீஸ் வேண்டாம் என்று கூறினர்; மேலும், 4,500 ரூபாய் சம்பளமும் கிடைத்தது. 'குரூப் - 2' தேர்வில் நான் உட்பட எங்கள் மையத்தில் படித்த பலரும் தேர்வானோம். ஆனால், நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. மனம் தளராமல் அடுத்த தேர்வுக்கு தயாரானேன்.
கடந்த 2011ல், 'குரூப் - 4' தேர்வில் வெற்றி பெற்று வி.ஏ.ஓ., ஆனேன். மீண்டும் குரூப் - 2 தேர்வு எழுதி, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றேன்.
தஞ்சை தாலுகா அலுவலகத்தில் சீனியர் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பதவி கிடைத்தது. பின், முதுநிலை ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்தது. பதவி உயர்வில் இப்போது தனி துணை தாசில்தாராக இருக்கேன்.
எல்லா தடைகளையும் மீறி, பெண்கள் வேலைக்கு போயிட்டாலே சுயமரியாதை, மரியாதை, பொருளாதார பலம், வளர்ச்சி என வாழ்க்கையில் எல்லா நல்லதும் நடந்து விடும்.

