/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
1,330 குறள்களுக்கும் காட்சி வடிவம் கொடுத்துள்ளேன்!
/
1,330 குறள்களுக்கும் காட்சி வடிவம் கொடுத்துள்ளேன்!
1,330 குறள்களுக்கும் காட்சி வடிவம் கொடுத்துள்ளேன்!
1,330 குறள்களுக்கும் காட்சி வடிவம் கொடுத்துள்ளேன்!
PUBLISHED ON : அக் 19, 2024 12:00 AM

பெண்களின் துயரங்களை ஓவியங்களாக பேச வைத்திருக்கும் சவுமியா ராமலிங்கம்: சொந்த ஊர் விழுப்புரம்; கஷ்டப்படும் நடுத்தர குடும்பம். பள்ளிப் படிப்பை முடித்த உடனேயே கல்லுாரியில் சேர முடியவில்லை; அதனால், டிசைனிங் கோர்சில் சேர்ந்தேன்.
அதன்பின், போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்தபடியே, அஞ்சல் வழியில் டிகிரி படித்தேன்.
சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஈடுபாடு இருந்தது. எட்டு ஆண்டுகள், 'ப்ரீலான்சராக' ஓவிய வேலைகள் செய்து, அந்த சேமிப்பில் முதுநிலை படிப்பு முடித்தேன்.
தற்போது, சென்னையில் இருக்கும் தனியார் கல்லுாரி ஒன்றில், காட்சி ஊடகத்துறை உதவி பேராசிரியையாக பணிபுரிகிறேன்.
வான்கா, டாலி போன்ற உலக கலைஞர்களின் மாய, எதார்த்த ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை, இங்குள்ள நம் தமிழ் இலக்கியங்கள் வழியாக பேச வேண்டும் என, முடிவு செய்தேன்.
ராமாயண ஓவியங்களில், சூர்ப்பனகையை மிகவும் கோரமாக வரைந்திருந்தனர். அவரை கண்ணியத்துடன் வரைந்தேன்.
அதேபோன்று, மோனலிசா ஓவியத்தை, நறுமுகையாக, நம் ஊர் பெண்ணாக மாற்றி பார்த்தால் எப்படி இருக்கும் என, சோதனை செய்தேன்; அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு.
பெண்கள் பிறந்து, வளர்ந்து, காலத்திற்கும் வீட்டு வேலை செய்து, அப்படியே மரணிக்கின்றனர்.
படிப்பு, வேலை என்று இருக்கும் பெண்களுக்கும் வீட்டு வேலை என வந்து விட்டால், அவர்கள் தான் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. மேலும், 80 சதவீத பெண்கள் சமையல் அறைக்குள்ளேயே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
கணவர் வேலைக்கு செல்ல, வீட்டை பெண்கள் பார்த்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயம் தான்; ஆனால், அதற்கான மரியாதை பெண்களுக்கு கிடைக்கிறதா என்பது தான் முக்கியம்.
ஆண் செய்யக்கூடிய வேலைக்கு பணம் கிடைப்பதால், அதை உயரத்தில் வைத்து, பெண்கள் செய்யும் வேலை இழிவாக பார்க்கப்படுகிறது; எந்தவொரு பாராட்டோ, அங்கீகாரமோ இதற்கு கிடைக்காது.
ஆனால், நான் வரைந்த ஓவியங்களை பார்த்த சில ஆண்கள், தங்கள் அம்மா, மனைவி, சகோதரியை அதில் பார்ப்பது போல் இருப்பதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினர்.
அந்த குற்ற உணர்ச்சி, அடுத்த கட்டமாக பெண்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கும் அளவுக்கு நகர வேண்டும் என்பதுதான் என் ஆசை.
'தினமும் ஒரு திருக்குறள் ஓவியம்' என மூன்று ஆண்டுகள், ஏழு மாதங்களில், 1,330 குறள்களுக்கும் காட்சி வடிவம் கொடுத்திருக்கிறேன்.
வருங்காலத்தில், 1,330 குறளோவியத்தையும் புத்தகமாக கொண்டு வரும் பணியிலும், அதை கண்காட்சியாக வைக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறேன்.

