/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தாமதிக்காமல் உங்கள் கனவுகளை துரத்துங்கள்!
/
தாமதிக்காமல் உங்கள் கனவுகளை துரத்துங்கள்!
PUBLISHED ON : அக் 12, 2024 12:00 AM

தன் 54 வயதிலும், 'டிரெக்கிங்'கில் கலக்கும், குழந்தைகள் நல மருத்துவரான, சென்னையைச் சேர்ந்த வி.பி.அனிதா: நான் பள்ளியில் படிக்கும் போது, சாரணியர் இயக்கத்தில் இருந்தேன். கோடை விடுமுறையில், 'டிரெக்கிங்' போவோம்.
என், 13வது வயதில் முதன் முதலாக கொடைக்கானல் செண்பகனுாருக்கு டிரெக்கிங் சென்றோம். தொடர்ந்து ஊட்டி, தடா அருவி என, பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். 1986ல், 'தேசிய ஹிமாலய டிரெக்கிங்' நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
அதன்பின் படிப்பு, திருமணம், குழந்தைகள் என வாழ்க்கை வேறு பக்கம் திரும்பியது. என் அக்கா இரண்டு ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் தவறி விட்டார்.
நமக்கு பிடித்த விஷயங்களை, 'அப்புறம் செய்து கொள்ளலாம்' என, தள்ளி போட்டபடியே இருந்தால், ஒரு கட்டத்தில், நம் உடல் அதற்கு ஒத்துழைக்குமா... அதற்கேற்ற சூழல் அப்போது இருக்குமா என்று தெரியாது.
அதனால், இனியும் தாமதிக்கக் கூடாது என, மீண்டும் டிரெக்கிங்செல்ல முடிவு செய்தேன்.
கணவர், இரண்டு மகன்கள் எல்லாரும் சப்போர்ட் பண்ணாங்க. 2022ல் மார்ச் மாதம் நேபாளத்தில் இருக்கிற, 'பிஷ் டெயில்' என்ற மலைக்கு டிரெக்கிங் போனோம். தரையில் இருந்து, 4,100 மீட்டர் உயரம் வரை மலை ஏறினோம்.
டிரெக்கிங் செல்லும் வழியெல்லாம் அழகான, சிவப்பு நிற, 'ரோடோடென்ட்ரான்' பூக்களும், மீனின் வால் போன்று இருந்த மலையும் அவ்வளவு ரம்மியமாக இருந்தன.
டிரெக்கிங் செல்வதற்காக ஒரு பிராண்டோட ஷூ வாங்கியிருந்தேன். அந்த ஷூவை போட்டு, ஒரு வீடியோ எடுத்து அனுப்ப சொன்னாங்க.
வீடியோ தேர்வானால், எவரெஸ்ட் பேஸ் கேம்ப் டிரெக்கிங் செல்வதற்கு, அந்த நிறுவனம் ஸ்பான்சர் செய்வதாக சொன்னாங்க. என்னோட வீடியோ தேர்வாகி, எவரெஸ்ட் பயண வாய்ப்பும் கிடைத்தது.
ஒரு மருத்துவமனையில் அப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருந்த நேரம். நான் பணியில் சேர வேண்டிய நாளில், முக்கியமான அதிகாரியுடனான ஆய்வும் இருந்தது; அதனால், விடுப்பை நீட்டிக்க முடியாது.
பயணத்தை நிறைவு செய்வதற்கு இரண்டு நாள் முன்னாடியே ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, பேஸ் கேம்புக்கு திரும்பி விட்டேன். அங்கிருந்து கிளம்பி, சென்னை வந்து, மறுநாள் பணிக்கு திரும்பி விட்டேன்.
குடும்பத்திற்காக ஓடினாலும், நமக்கான கனவுகளுக்கும், ஆசைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தனியாக ஒரு விஷயத்தை செய்யும் போது, மனதளவில் வலிமையாக மாறுவோம். எந்த சூழலையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.
இனியும் தாமதிக்காமல், உங்கள் கனவுகளை துரத்துங்கள்.

