/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
82 வயது பாட்டி வரை 'கேம்ப்' செய்துள்ளனர்!
/
82 வயது பாட்டி வரை 'கேம்ப்' செய்துள்ளனர்!
PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM

பயணங்களின் போது, 'கேம்ப்' போட்டு தங்குவதற்கான ஏற்பாடு செய்து தரும், சென்னையைச் சேர்ந்த, 'எக்ஸாட்டிக் கேம்ப்' நிறுவனத்தை நடத்தும் சுவாமிநாதன், விஜய்:
பொதுவாக பயணம் செய்யும்போது ஹோட்டல் அறையிலோ, காட்டேஜிலோ நான்கு சுவர்களுக்குள் தங்குவோம். வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.
'கேம்ப்' எனப்படும் கூடார அமைப்பில், நமக்கும், இயற்கைக்கும் இடையே மெல்லிய, 'டென்ட்' திரை மட்டுமே இருக்கும்.
மலையில் தங்கினால் அதன் வாசம், காற்றின் ஈரப்பதம், குளிர், நட்சத்திரங்கள், பறவை, பூச்சிகளின் சத்தம் என அனைத்தையும் உணர்ந்து, பார்த்து, ரசித்து அனுபவிக்க முடியும்.
கேம்பிங் என்றால் மலை உச்சியிலோ, காடுகளிலோ சுலபத்தில் செல்ல முடியாத இடத்தில் மட்டும் தங்குவது அல்ல. வயதானவர்கள் செல்லக்கூடிய வகையில், சமதளத்திலும் கேம்ப் போட முடியும்.
வார இறுதி நாட்களில் குழுவாகச் செல்லும் கேம்பிங் நிகழ்ச்சிகளை 2016ல் ஒருங்கிணைத்தோம். 2020ல், செயலி ஒன்றை உருவாக்கினோம்.
தனியார் இடங்களை வாடகைக்கு வாங்கி, அவற்றில் கழிப்பறை வசதி, சமையலறை உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தி கேம்பிங் இடங்களாக மாற்றினோம்.
தற்போது தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, வடகிழக்கு பகுதிகளில் ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் என இந்தியா முழுதும், 90 கேம்ப்கள் உள்ளன. வீட்டிலிருந்தபடி பணியாற்றும் ஆண், பெண்களுக்கு ஏற்ற வகையிலும் கேம்பிங் இடங்கள் இருக்கின்றன.
வேலை பார்ப்பதற்கான இடம், வைபை வசதி, 24 மணி நேரம் மின்சாரம் இருக்கும். வேலை நேரம் முடிந்த பின், அருகிலுள்ள இடங்களை பார்வையிடவும் உதவிகள் செய்யப்படும்.
அவர்களே சமைத்துக் கொள்ளும் வகையிலும் சமையலறை வைத்திருக்கிறோம்.
பொதுவாக, பெண்களுக்கு கேம்பிங் செல்ல ஆர்வம் இருக்கும். ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்த தயக்கம் இருக்கும். இதை போக்குவதற்காகவே, எங்கள் கேம்பிங் இடங்கள் எதிலும் மது அருந்த அனுமதிப்பதில்லை.
கடந்த 2016ல், 10 ஆண்கள் பயணித்தால் அவர்களில் ஒரு பெண் இருப்பார். பின், அதில் பெரிய மாற்றம் ஏற்பட்டு, கடந்த ஆண்டில் மட்டும், 2,600 பெண்கள் தனியாக கேம்பிங் செய்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் முதல்முறை பயணம் செய்பவர்கள். நான்கு மாதக் குழந்தையிலிருந்து, 82 வயது பாட்டி வரை கேம்பிங் செய்துள்ளனர்.
குழுவாக கேம்ப் செய்ய விரும்பும் பெண்களுக்கு உதவ, பெண் ஹோஸ்ட் உடனிருப்பார். எங்களுடன் அடிக்கடி கேம்பிங் செய்த பெண்களுக்கு ஹோஸ்ட்டாக மாறி, பயணங்களை ஒருங்கிணைக்கும் வேலைவாய்ப்பையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.
தொடர்புக்கு:
97900 00401

