PUBLISHED ON : ஏப் 15, 2024 12:00 AM

பிரதமர் மோடியின் கரங்களால் சமீபத்தில் விருதுபெற்று, கவனம் ஈர்த்திருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி. அதுபற்றி கூறுகிறார்:
மத்திய அரசு அண்மையில், 'தேசிய படைப்பாளி விருது'களை அறிவித்தது. சர்வதேச அளவில் நம் நாட்டின் வலிமை, பண்பாட்டை பரப்ப உதவியவர்கள், சமூக மாற்றம், கல்வி, சுற்றுச்சூழல், வேளாண் மற்றும் சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமாக விளங்கிய படைப்பாளிகளுக்கு, 20 பிரிவுகளில், தேசிய படைப்பாளி விருது அளிக்கப்பட்டது.
அதில், சிறந்த கதை சொல்லும் பிரிவில் தான் எனக்கு விருது வழங்கப்பட்டது. இந்திய வரலாறு பற்றிய பல தவறான கற்பிதங்களைப் போக்கி, உண்மையான வரலாற்றை என், 'யு டியூப் சேனல்' வாயிலாக பிரபலப்படுத்தியதற்குத் தான், எனக்கு இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் மொத்தம் ஒன்றரை லட்சம் பேர். இவர்கள் பற்றி இணையத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களால், 200 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். அந்த, 200 பேரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, 23 பேரில் நானும் ஒருவர். விருது வழங்கும் விழா, கடந்த மார்ச் 8ல் டில்லியில் கோலாகலமாக நடைபெற்றது.
விருதை பெறும்போது, பிரதமர் காலில் விழுந்து நான் வணங்க, பிரதமரும் அவ்விதமே வணங்கியது இணையத்தில் வைரலானது. 'உங்கள் கதைகளால், இளம் தலைமுறையினருக்கு நன்மைகள் பல கிடைக்கும். நாட்டுக்கு மிகப்பெரிய சேவையை நீங்கள் செய்கிறீர்கள்' என்று பிரதமர் மோடி பாராட்டினார்.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவள் நான். சென்னையைச் சேர்ந்த நான், தற்போது உ.பி.,யின் லக்னோவில் வசிக்கிறேன். தொல்பொருள் ஆராய்ச்சியாளராக விரும்பினேன். ஆனால், தமிழகத்தில் அதற்கான படிப்பு ஏதுமிருக்கவில்லை.
தமிழகத்திற்கு வெளியே என்னை அனுப்ப என் பெற்றோரும் விரும்பவில்லை. எனக்கு மருத்துவத்திலும் இடம் கிடைத்தது. ஆனால், நான் அதைத் தவிர்த்து விட்டு, வரலாற்றையே படித்தேன்.
பல இடங்களில் வரலாறு திரித்து எழுதப்பட்டிருந்தது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாகவே வரலாறு எழுதப்பட்டு வந்திருக்கிறது. உண்மை வரலாற்றை ஆழமாகக் கற்க துவங்கினேன்.
எதையும் அப்படியே மனப்பாடம் செய்யாமல், அடிப்படை காரணி களை ஆழ்ந்து பகுத்தாயும் முறையிலேயே பாடங்களை படிப்பேன்.
தவிர, பாடங்களை கதை வடிவில் உள்வாங்கும் இயல்பும் இருந்ததாலேயே என் நாட்டம், வரலாற்றுப் படிப்பின் மீது சென்றது. வரலாறு மற்றும் சமூக நிகழ்ச்சிகள் பற்றிய காணொலிகளை, என் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுகிறேன்.
துவக்கத்தில் என் பதிவுகள் அவ்வளவாக கவனம் பெறவில்லை. ஆனால், ஆணித்தரமான கருத்துகளுடன் தொடர்ந்து காணொலிகளை வெளியிட்டு வந்தேன்.
ஏழெட்டு மாதங்களுக்குப் பின் அவை பரபரப்பை பற்ற வைத்துள்ளன. அதே சமயம், எதிர்மறை விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படாமல், தொடர்ந்து என் வலைதளத்தில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன்!

