/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கற்று கொடுக்கும்போது நாமும் கற்க வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி!
/
கற்று கொடுக்கும்போது நாமும் கற்க வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி!
கற்று கொடுக்கும்போது நாமும் கற்க வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி!
கற்று கொடுக்கும்போது நாமும் கற்க வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி!
PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM

தான் நேசிக்கும் இசைக்காக மருத்துவ படிப்பையும், பூர்வீகமான லண்டனையும் விட்டு சென்னையில் குடியேறிய புண்யா: நான் ஒரு மருத்துவ மாணவி. டாக்டராக வேண்டும் என்பது தவிர, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் தான் இருந்தேன்.
இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மாவுக்கு புற்றுநோய் உறுதியாகி இருந்தது. மன அழுத்தம் நிறைந்த நாட்கள் அவை. இனி மருத்துவம் படிக்க விருப்பமில்லை என்பது புரிந்தது. அம்மாவிடம் பேசியபோது, 'நீ ஏன் சூப்பர் சிங்கரில் பாடக் கூடாது?' என்று கேட்டார்.
எனக்கு இசையின் மேல் சிறு வயது முதலே ஆர்வம் உண்டு. நண்பர்களிடமும், நலம் விரும்பிகளிடமும் இது குறித்து பேசினேன்.
'இசைத்துறை எதிர்காலத்துக்கு நல்லதல்ல... வருமானம் நிரந்தரமாக இருக்காது; நல்ல வேலைக்கு முயற்சி செய்' என்று, பலரும் பலவிதமான அறிவுரைகள் கூறினர்.
எனக்கும் அவர்கள் சொன்னது சரியாகத்தான் தோன்றியது. சூப்பர் சிங்கர் ஆடிஷன் சென்னையில் நடந்து கொண்டிருந்தது. 'எல்லா குழப்பங்களையும் விட்டுவிட்டு, எனக்காக முயற்சி செய்' என்று அம்மா கூறினார்.
'ஆசைப்பட்டதை கொஞ்சம் கூட முயற்சி செய்யாமல் விட்டு விட்டோமே' என்ற வருத்தம் எதிர்காலத்தில் எனக்குள் வந்துவிடக் கூடாது என்று தோன்றியது.
குறைந்தபட்சம் ஒரு முறையாவது முயற்சி செய்து பார்க்கலாம் என்று தீர்மானித்து, சூப்பர் சிங்கர் போட்டிக்கு அடாப்ட் ஆக மிகுந்த சிரமப்பட்டேன்.
ஒவ்வொரு சுற்றுக்கும் என்னுடைய பெஸ்ட் எதுவோ, அதை கொடுக்க வேண்டும் என்பது தான் சிந்தனையாக இருந்தது. கடைசியில் என்னவாகும் என்பதையெல்லாம் யோசிக்கவில்லை.
இறுதிச்சுற்றுக்கு பிறகு இனி அம்மாவுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதனால், உடனே லண்டன் திரும்பி விட்டேன். ஆனாலும், அம்மா எங்களை விட்டு போய் விட்டார். அம்மாவின் இழப்பு, கடுமையாக பாதித்தது.
அம்மாவின் ஆசைக்காக என்னை லட்சியத்தை நோக்கி செல்வது தான் அவருக்கு சந்தோஷமாக இருக்கும் என்று மீண்டும் பாடத் துவங்கினேன். இப்போது, சென்னைக்கே வந்து செட்டில் ஆகிவிட்டேன்.
இப்போதும் சூப்பர் சிங்கர் டீம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது. போட்டியில் பங்கேற்கும் பாடகர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு கொடுக்கின்றனர். மற்றவருக்கு கற்று கொடுக்கும்போது நானும் அதிலிருந்து கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைப்பது எனக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது.
மேலும், பிரபல இசையமைப்பாளர்களிடம் இருந்து பாடுவதற்கான வாய்ப்புகள் வருகின்றன. நிறைய இசை நிகழ்ச்சிகளும் செய்கிறேன்.

