/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
அமுதசுரபியாக எங்க பண்ணை இருக்குது!
/
அமுதசுரபியாக எங்க பண்ணை இருக்குது!
PUBLISHED ON : மே 15, 2024 12:00 AM

திருவண்ணாமலை மாவட்டம், கீரனுார் கிராமத்தை சேர்ந்த, 68 வயதாகும் மாலா:
நிறைய சொத்து இருந்தும், என் சொந்த கிராமத்தில் கம்பங்களி, கயிற்றுக் கட்டில் என, எளிமையான வாழ்க்கையை தினமும் ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 20 ஏக்கர் பரப்பளவில் விவசாயம், ஆடு, மாடு போன்ற கால்நடைகள், பலவிதமான பறவைகள், தேனடைகள் நிறைய தேனீக்கள் என, பல்லுயிர் சூழலை உருவாக்கி, உழவு செய்கிறேன்.
சென்னையில் கட்டுமான தொழிலில் என் கணவரும், பிள்ளைகளும் இருக்காங்க. மேற்கு மாம்பலத்தில் இருக்கும், எங்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தில், 'வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் மனைவியிடம் தோற்றுவிடு'னு என் கணவர் எழுதியிருக்கிறார்.
மாசத்துக்கு நாலஞ்சி வாட்டி இங்க வந்துட்டு போறார். அவர் வரும்போதும், காத்தோட்டமாக வெளியில் தான் சாப்புடுவோம். வெளிய கெடக்குற கயித்துக் கட்டிலில் தான் துாங்குவோம். இங்க ஏசியெல்லாம் கிடையாது.
என் சின்னப் பொண்ணு அமெரிக்காவில் இருப்பதால், அவளை பார்ப்பதற்காக குடும்பத்தோட எப்பவாவது போவோம். அங்கயும் சாதாரண புடவையில் தான் இருப்பேன்.
பிரான்ஸ், இஸ்ரேல், ஜெருசலேம், எகிப்து, மலேஷியா, சிங்கப்பூர் என, 20 நாடுகளுக்கும் மேல் சுத்தியிருக்கேன். இப்பகூட நானும் என் கணவரும் காஷ்மீர் போயிட்டு வந்தோம்.
ஆனால், அங்கயெல்லாம் 10 - 20 நாட்களுக்கு மேல் தங்க முடியவில்லை. நாலு சுவத்துக்குள்ளயே கிடக்க வேண்டியிருக்கு. ஆயிரம் சொன்னாலும் நம்ம ஊரு மாதிரி வராது.
இங்க பாருங்க... இந்த ஆடு, மாடுங்க கூட சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தா எவ்வளவு நல்லாயிருக்குது. எட்டிப் பார்க்கிற துாரத்தில் துரிஞ்சல் ஆறு ஓடுது. தண்ணிக்கு பிரச்னை இல்ல.
பிற்காலத்துலயும் தண்ணி பஞ்சம் வந்துடக் கூடாதுனு மொட்ட மாடியில் விழுற மழை தண்ணீரை சேமிச்சி வெச்சிக்கிறோம். சேமிக்கிற தண்ணீரை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் பராமரிக்கிறோம்.
தேக்கு, நாவல், வேம்பு, மா, அருநெல்லி, சப்போட்டா, பனை, தென்னை என, சின்னச் சின்ன தோப்புகளா பராமரிக்கிறோம். அது தவிர நெல்லு, எள்ளு, கேழ்வரகு, கம்பையும் பயிர் செஞ்சிருக்கோம். வேர்க்கடலை, காராமணி, உளுந்து, துவரையும் ஊடுபயிரா போட்டுருக்கோம்.
சப்போட்டா, மா மரங்களில் கிடைக்கிற பழங்களை முதலில் பறவைகளுக்கு விட்டுடுறோம். அதுங்க சாப்பிட்டது போக மிச்சம், மீதி இருந்தா எப்பவாவது, யாராவது பறிச்சி சாப்புடு வாங்க. பறிச்சு விக்கிறது கிடையாது.
மத்தபடி, நெல்லு மாதிரியான பயிர்களைகளையெடுக்க, அறுவடை செய்ய கூலி ஆட்கள் வைத்து தான் செய்கிறோம். நான் கூடமாட உதவி செய்வேன்.
எங்க குடும்பம், எங்க நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, புளி, சிறுதானியம், தேங்காய்னு கொடுக்கிற ஒரு அமுதசுரபியாக இந்த பண்ணை இருக்கு.

