/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தோட்டத்தில் லாபம் பார்ப்பது என் நோக்கமல்ல!
/
தோட்டத்தில் லாபம் பார்ப்பது என் நோக்கமல்ல!
PUBLISHED ON : ஏப் 07, 2024 12:00 AM

நாடு முழுக்க, 60க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட, 'அடையார் ஆனந்த பவன்' நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசராஜா:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தான் எங்களுடைய பூர்வீகம். தாத்தா, அப்பா எல்லாம் விவசாயிகள். ஊரில் கிட்டத்தட்ட, 90 ஏக்கர் பரப்பில் நாலு தலைமுறையாக மா, தென்னை விவசாயம் செய்கிறோம்.
தொழில் காரணமாக நாங்க சென்னை வந்தாலும், ஊரில் இருக்குற இடத்தில் தொடர்ந்து விவசாயம் பண்ணிட்டு தான் இருக்கோம். சென்னையில் நிலம் வாங்கி விவசாயம் பண்ணணுங்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில், 10 ஏக்கரில் நிலம் வாங்கினேன். எங்க வீட்டு பெண்கள் தான் இந்த நிலத்தை நிர்வகிக்கணும்னு ஆசைப்பட்டு, அவங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கேன்.
பராமரிப்பு பணிகளை நான் கவனிச்சுக்கிட்டாலும், நிர்வாக செலவுகள் அனைத்தையும் எங்க வீட்டு பெண்கள் தான் நிர்வகிக்கிறாங்க.
இந்த தோட்டத்தில் அல்போன்சா, கிளிமூக்கு, பங்கனப்பள்ளி, பஞ்சவர்ணம் உள்ளிட்ட பல ரகங்களை சேர்ந்த மா மரங்களும், நெட்டை ரக தென்னை மரங்களும் உள்ளன.
இங்கு காய்கறிகள், கீரை வகைகள், நிலக்கடலை, பசுந்தீவனம் உள்ளிட்ட பலவிதமான பயிர்களும் சாகுபடி செய்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசன் சமயத்தில், இங்க அறுவடை செய்யும் பழங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு பங்கிட்டு கொடுத்த பின், நாங்க நடத்தக்கூடிய அங்காடிகள் மூலம் விற்பனை செய்கிறோம்.
தென்னை மரங்கள் மூலம் கிடைக்குற தேங்காய்களை எங்களோட உணவகங்களுக்கு பயன்படுத்திக்குவோம்.
இந்த தோட்டத்திலேயே பண்ணை அமைத்து கிர், சிந்தி இனங்களைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கிறோம். இயற்கை விவசாயம் செய்ய, மாடுகள் மிகவும் அவசியம்.
மாட்டு சாணத்தால் தான், இந்த தோட்டத்தில் உள்ள பயிர்கள் எல்லாமே நல்லா செழிப்பா வளர்ந்துக்கிட்டு இருக்கு.
தினமும், 100 லிட்டர் பால் விற்பனை செய்கிறோம். இந்த தோட்டத்திலேயே எங்களோட வீட்டுக்கு தேவையான காய்கறிகள், கீரைகள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கிறோம். இந்தத் தோட்டம் மூலமாக லாபம் பார்ப்பது என்னோட முதன்மையான நோக்கமல்ல.
இயற்கை விவசாயம் மூலம் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யணும். மன இறுக்கத்தையும், கவலைகளையும் குறைக்கக் கூடிய வகையில் பசுமையான சூழலை உருவாக்கணும்னு ஆசைப்பட்டேன்.
அது இப்ப நிறைவேறிக்கிட்டு இருக்கு. இந்த மனநிறைவே எனக்கு போதும்.
*************************
போட்டியாளர்களை பார்த்து மனம் புழுங்க கூடாது!
வெற்றிகரமான நிறுவனத்துக்கு, தான் பின்பற்றும் விதிகள் குறித்து கூறும், 'டாடா சன்ஸ்' நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன்:எந்த பிசினஸ் செய்வதாக இருந்தாலும், அதன் மதிப்பின் மீது தான் கவனம் இருக்க வேண்டுமே தவிர, அதன் மதிப்பீட்டின் மீது அல்ல. எந்த பிசினசாக இருந்தாலும் அதை ஓர் அறத்துடன் செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என்ற முடிவுகளை முடிந்தவரை எளிதாக நீங்கள் எடுத்து வைத்திருந்தால், இறுதி முடிவை எடுப்பதில் உங்
களுக்கு பெரிய கஷ்டம் எதுவும் இருக்காது என்பதே என் அனுபவம்.
பிசினஸ் என்று வந்து விட்டாலே பலரும் வளர்ச்சி பற்றி பேசுவர். காரணம் அதை தான் பலரும் விரும்புவர். ஆனால் செல்லும் திசை சரியாக இருந்தால், வேகமாக செல்ல வேண்டும்.நிறுவனத்தின் வேகத்தை ஒருமுறை அதிகரித்து அடைய நினைக்கும் துாரத்தை அடைந்து விட்டால், அத்துடன் நின்று விடக்கூடாது.துாரத்தை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதே நேரம், பொறுமையும் இருக்க வேண்டும். பிசினசில் ஒருமுறை சில மாற்றங்களை செய்து விட்டால் போதும் என்று நினைக்கக் கூடாது. தொடர்ந்து மாற்றங்களை செய்தபடியே இருக்க வேண்டும்.நிறுவனத்திற்கான ஊழியரை தேர்வு செய்யும் போது, பல விஷயங்களை பார்க்க வேண்டும்... வெற்றி பெற வேண்டும் என்கிற மனோபாவமும், எதையும் பாசிட்டிவாக அணுகும் எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும்.
நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவராக இருக்க கூடாது. அனைவருடனும் இணைந்து பணியாற்றும் எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும்.
நாம் சந்திக்கும் மிகப் பெரிய அபாயமே, நம் இலக்கை அதிகமாக நிர்ணயம் செய்து, அதை நிறைவேற்ற முடியாமல் போவதில் இல்லை. நம் இலக்கை மிகக் குறைவாக நிர்ணயம் செய்து, அதை நிறைவேற்றிக் கொள்வதில் தான் இருக்கிறது.
பிசினசில் போட்டியையும், சந்தை பங்களிப்பையும் நினைத்து பலரும் மனம் குழம்பி போகின்றனர். நல்ல ஆரோக்கியமான போட்டி எப்போதும் தேவை.அது இல்லை எனில் நாம் வளர மாட்டோம். எனவே, ஆரோக்கியமான போட்டியை நாம் கொண்டாட வேண்டும்.என் வாடிக்கையாளருக்கு நான் எப்படி சிறப்பான சேவையை தரலாம். என் பலம் என்ன, என் பலத்தை அதிகரித்து கொள்வது எப்படி என்று கேட்டு செயல்பட வேண்டுமே தவிர, போட்டியாளர்களை பார்த்து மனம் புழுங்கக் கூடாது.

