PUBLISHED ON : டிச 16, 2025 02:53 AM

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி:
மகளிர் உரிமைத் தொகை மூலம், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. அவர்களது சிறிய செலவுக்கு கூட, யாரையாவது நம்பியிருந்த நிலை இன்று மாறி உள்ளது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்கும் போது கஜானா காலியாகும் நிலையில் இருந்தாலும், 2023 செப்டம்பரில் இருந்து மகளிர் உரிமை திட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் இதுவரை, 30,838 கோடி ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடை தேங்காயை எடுத்து, வழி பிள்ளையாருக்கு உடைச்ச கதையாக, மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்கிட்டு, தி.மு.க., அறக்கட்டளை பணத்தை கொடுத்த மாதிரி பெருமை அடிச்சிக்கிறாங்களே!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'அனைத்து மகளிருக்கும் மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை' என ஏமாற்றி, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'தகுதியுள்ள மகளிருக்கு மட்டும்' என கூறி, பாதி பேரை புறக்கணித்தது. தற்போது மீதமிருக்கும், 17 லட்சம் மகளிருக்கும் உரிமைத் தொகை கொடுக்கிறோம் என்று சொல்கின்றனர். கடந்த மாதம் வரை உரிமைத் தொகைக்கு தகுதியற்றவர்களாக இருந்தவர்கள், தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் தடாலடியாக தகுதி பெற்றதன் பின்னணி என்ன?
இந்த, 17 லட்சம் பெண்கள் மற்றும் அவங்க குடும்பத்தினர் ஓட்டுகளுக்கு குறி வைப்பது தான் அந்த பின்னணி!
பாரத ஹிந்து எழுச்சி முன்னணி தலைவர் பாண்டியன் பேட்டி: ஹிந்துக்களின் வரிப்பணம், கோவில் உண்டியல் பணத்தை பயன்படுத்திக் கொள்ளும் தி.மு.க., அரசு, ஹிந்துக்களை வஞ்சித்து வருகிறது. ஹிந்துக்கள் உரிமைகளை பாதுகாக்க, நீதிமன்றத்தை நாடும் நிலையே உள்ளது. திருப்பரங்குன்றத்தில், கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்றலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்ற தமிழக அரசு தடை விதித்து வருகிறது.
வஞ்சிக்கப்படும் ஹிந்துக்கள், தேர்தல் நேரத்தில் கொதித்து எழுந்தால், இவங்களது ஆட்டம் அடங்கிடும்!
திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் பேச்சு: சினிமாவில் நடிகர் விஜய், 100 பேரைக்கூட அடித்து துவம்சம் செய்வார். அவர் நடிகர்; அதில் தான் அப்படி செய்ய முடியும். ஆனால், முதல்வர் ஸ்டாலினால் அது முடியாது. அவர் உண்மையான தலைவர். சினிமாவில் விஜய் ஆக் ஷனை பார்த்து, சிறுவர்கள் ஆச்சரியப்படுவர். அப்படித்தான் எம்.ஜி.ஆரை பார்த்து, மக்கள் ஏமாந்து போயினர். அதுபோல் விஜயிடமும் மக்கள் ஏமாந்துவிட வேண்டாம்.
- எம்.ஜி.ஆரை சாதாரண நடிகர்னு அலட்சியமாக நினைத்து ஏமாந்து போனது, தி.மு.க., தான்!

