PUBLISHED ON : நவ 28, 2025 12:00 AM

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி: மத்திய பா.ஜ.,
அரசு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்காமல், அம்மாவட்ட
மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. ஆனால், அக்கட்சியினர்
பிரதமர் மோடியை அழைத்து வந்து, விவசாயிகளை ஏமாற்றும் நாடகத்தை
நடத்தியுள்ளனர். மோடிக்கு கோவை மக்கள் கருப்புக்கொடி காட்டி இருக்க
வேண்டும். இவங்க கூட்டணியில் இருக்கும் காங்., - எம்.பி., கார்த்தி, 'கோவை,
மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டமே தேவையில்லை'ன்னு சொன்னது, இவர் காதுல
விழலையோ?
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும், 'கோல்ட்ரிப்' மருந்து சாப்பிட்டு, ம.பி.,யில் பல குழந்தைகள் உயிரிழந்தன. அதற்கு முன்பே, தமிழக அரசு சோதனை நடத்தி, கோல்ட்ரிப் மருந்து தரமற்றது என, அறிவித்தது. ஆனால், மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிவிக்கவில்லை என்பதால், தரமற்ற மருந்துகளின் விபரங்களை வழங்காத மாநிலங்களின் பட்டியலில், தமிழகத்தின் பெயரும் உள்ளது. குழந்தைகள் உயிர் விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது.
இந்த விவகாரத்தில், தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் படுமோசம் என்பதில் மாற்று கருத்துக்கே இடமில்லை!
தமிழக பா.ஜ., செயலர் கராத்தே தியாகராஜன் அறிக்கை: சென்னை மாநகராட்சியின், அம்பத்துார் மண்டலத்திற்கு, 1,500 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், 400 பேர் பணியில் இல்லாத நிலையில், அவர்களுக்கும் சேர்த்து ஊதியம் பெறப்படுகிறது. இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் கொடுத்தேன்; விசாரிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அந்த, 400 பேருக்கும் மாதம் குறைந்தபட்சம், 10,000 ரூபாய் சம்பளம் என்றாலும், 40 லட்சம் ரூபாய் வருதே... இந்த பணம் யார் யாருக்கு போனது என்பதையும் மாநகராட்சி கமிஷனர் கண்டுபிடிக்கணும்!
சென்னை, மயிலாப்பூர் மேற்கு பகுதி அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் பேச்சு: தி.மு.க., வரலாற்றில் தனித்து போட்டியிட்டது கிடையாது. அ.தி.மு.க., மட்டும் தான் 234 தொகுதிகளில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்த கட்சி. 'தமிழகத்தில் பெரிய கட்சி, நம்பர் ஒன் கட்சி' என, தி.மு.க.,வினர் சொல்கின்றனர். தி.மு.க.,வினருக்கு தைரியம் இருந்தால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடியுமா?
அ.தி.மு.க., தனியாக நின்றது, ஜெ., காலத்தில்... இப்ப, தனியாக நிற்கும் துணிச்சல் இவங்க தலைமைக்கு இருக்குதா?

