PUBLISHED ON : நவ 15, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'டில்லி
பிக்பாஸ்க்கு ஆமாம் சாமி போடும் பழனிசாமி' என, முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
செய்துள்ளார். கடந்த கால தி.மு.க., ஆட்சியில், காங்., தலைமையின்
அழுத்தத்தால், காவிரி நதிநீர் வழக்கை, உச்ச நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது;
கச்சத்தீவை தாரைவார்த்தபோதும், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது
பட்டியலுக்கு மாற்றியபோதும் தி.மு.க., 'ஆமாம் சாமி' போட்டதை, முதல்வர்
ஸ்டாலின் வசதியாக மறந்து பேசுகிறாரா அல்லது மறைக்க பார்க்கிறாரா?
மொத்தத்தில், தேசிய கட்சிகளுடன் யார் கூட்டணி வச்சாலும், அவங்க சொல்வதை
கேட்டு, பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டணும் என்பது மட்டும் தெளிவா
தெரியுது!
சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் பேச்சு: த.வெ.க.,வில் உள்ளவர்களை தற்குறிகள் என்று சொல்லி, அவர்களை அவமானப்படுத்தாதீர்கள். அவர்களின் மொழி நமக்கு தெரியவில்லை; அதனால் நாம் பேசவில்லை. நாம் பேசினால் அவர்களுக்கு புரிய வைக்கலாம். அங்கு, தலைமையாக இருப்பவர்கள் சுயநலவாதிகளாக இருக்கின்றனர். அங்கு இருப்பவர்கள் ரசிகர்கள்; அவர்களை விமர்சிக்க வேண்டாம். அவர்களுடன் நாம் பேச வேண்டும்.
இப்படி, 'சேம் சைடு கோல்' போட்டு, த.வெ.க.,வினரை விமர்சித்த தி.மு.க.,வினரை எல்லாம் இவர் தற்குறிகள் ஆக்கிட்டாரே!
தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தனியரசு பேட்டி: வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு அதிகமாக உள்ளது. 'வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் போட்டி' என, விஜய் பேசியது அபத்தமாக உள்ளது. தி.மு.க., என்ற பல்கலைக்கழகத்தை த.வெ.க., என்ற பால்வாடி எதிர்ப்பது போல உள்ளது. சினிமாவில் வசனம் பேசுவது போல, விஜய் வேண்டுமானால் அப்படி பேசி மகிழ்ந்து கொள்ளலாம்.
தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் ஆஸ்தான வித்வான்களை எல்லாம், 'ஓவர் நைட்'ல ஓரம்கட்டிருவார் போலிருக்கே! தமிழக காங்., செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.நெடுஞ்செழியன் அறிக்கை: தமிழகத்தில், சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கு தயாராகி வரும் நிலையில், தமிழக காங்கிரசில் மாவட்டத் தலைவர்களை மாற்றுவதற்காக, டில்லி மேலிடம், 38 தேர்வு குழுவினரை அனுப்பி வைத்துள்ளது. தேர்தல் பணிகள் பாதிக்கும் என்பதால், கட்சியின் நலனுக்காக, தேர்வுக்குழுவை திரும்ப பெற வேண்டும்.
தேர்தல் நேரத்தில் மாவட்ட தலைவர்களை மாத்தினா, தேன்கூட்டில் கல்லெறிந்த கதையா போயிடுமே!

