PUBLISHED ON : ஜூலை 23, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., செயலர் எஸ்.ஜி.சூர்யா அறிக்கை: தி.மு.க.,விடம்
சுயமரியாதையையும், தன்மானத்தையும் அடகு வைத்த தமிழக காங்., தலைவர்
செல்வப்பெருந்தகைக்கு, காமராஜர் ஒரு முடிந்து போன பிரச்னையாக இருக்கலாம் .
ஆனால், காமராஜரை நெஞ்சில் பூஜிக்கும் தேசிய உள்ளங்களை இந்த வார்த்தைகள்
தீயாக சுடுகின்றன. காமராஜரை உரிமை கொண்டாடும் தார்மீக உரிமையை காங்கிரஸ்
இழந்து விட்டது. அவர் முடிந்து போன பிரச்னை அல்ல என்பதை வரும் தேர்தலில்
நிரூபிப்போம். காமராஜர் பிரச்னையை யார் மறந்தாலும், இவர் மறக்க விட
மாட்டாரு போலிருக்கே!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை கடந்த, 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், 2019 அக்டோபர், 28ல் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த அரசு மருத்துவர்களிடம், 'உங்களுடன் ஸ்டாலின் இருக்கிறேன், கவலைப்படாதீர்கள்' என, கையை பிடித்து கொடுத்த வாக்குறுதியை, நம் முதல்வர் இதுவரை நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது.
ஆட்சியில் இருந்த நாலே முக்கால் வருஷத்துல நிறைவேற்றா ததை, எஞ்சியிருக்கும் காலத்தில் நிறைவேற்றுவார்னு இன்னும் நம்புறீங்களா?
தமிழக காங்., மாணவரணி த லைவர் சின்னதம்பி பேட்டி: இன்றைய மாணவர்கள், பெற்றோர்,- ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் நடக்கின்றனர். 'ஆசிரியரை மதிப்பது என் பொறுப்பு' என்ற பொருளில், மாநில அளவிலான விழிப்புணர்வு வாரத்தை கல்வி அமைச்சர் அறிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கம், பணிவு, மரியாதை ஆகியவற்றை விளக்கும் விதமான பாடங்களை கல்வித் திட்டத்தில் சேர்க்க வேண்டும். மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க, ஒரு வாராந்திர ஆலோசகர் சந்திப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
முறையான வகுப்பறைகள், டேபிள், டெஸ்க் இல்லாம பல அரசு பள்ளிகள் அலங்கோலமா இருக்கு... அதையே சரி பண்ணாதவங்க, இதை எல்லாம் செய்வாங்களா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: கூட்டணி யில் ஏதேனும் ஒரு சிறிய கட்சி மாற்று குரல் எழுப்பினாலும் அவர்களிடம் கெஞ்சி, அறிவாலயத்திற்கு அழைத்துச் சென்று சமரசம் செய்யும் நிலைக்கு, தி.மு.க., சென்று விட்டது. நியாயத்துக்காக போராடிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இருந்த காலம் வேறு. இன்றைக்கு இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் முத்தரசன் போன்றோர், ஆட்சியாளர் களுக்கு ஜால்ரா போடக் கூடிய வகையில் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.
கம்யூ.,க்களுக்கு வேற வழியில்லையே... உங்க பக்கம் வரலாம்னு பார்த்தா, அவங்க கொள்கை எதிரியான, பா.ஜ.,வை நீங்க பக்கத்துல வச்சிருக்கீங்களே!

