PUBLISHED ON : ஏப் 10, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: விதண்டாவாதம்,
விதர்ப்பமான கருத்துகளை தான் தி.மு.க., எப்போதும் முன்வைக்கும்.
அது, அவர்களின் பிறவிக்குணம். தலைவர் எவ்வழியோ, தொண்டர்களும்
அவ்வழி என்பதுபோல அமைச்சர் துரை
முருகன்,
மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாகப் பேசியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை, முதல்வர்தான் வைத்துள்ளார்.
மூத்த அமைச்சரான துரைமுருகனின் கருத்தை, முதல்வர் எப்படி
எடுத்துக் கொள்கிறார், என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க
முடியும்.
ஹிந்துக்களை விமர்சித்து ராஜா பேசியதையே முதல்வர்
கண்டுக்கலை... அவரைவிட மூத்தவரான துரைமுருகன் பேச்சை மட்டும்
கண்டிப்பாரா என்ன?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: காவிரி நதி நீர் வழக்கை, உச்ச நீதிமன்றத்தில் வாபஸ் பெறக் காரணமாக இருந்தது, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை தடுத்து நிறுத்தாதது, 'நீட்' தேர்வை அறிமுகப்படுத்திவிட்டு, தற்போது அதை எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவது எல்லாம், அவ்வப்போது தி.மு.க., நடத்திய ஓரங்க நாடகங்களாகும். 'டிவி'யில் பொறுப்பு துறப்பு அறிவிப்புக்குப் பின் துவங்கும், 'மெகா' தொடர்கள் போல், தி.மு.க.,வின் தேர்தல் நாடகங்கள், தற்போது அரங்கேறி வருகின்றன.
இவங்க ஆட்சியில் இருந்தப்ப, மேற்கண்ட பிரச்னைகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது மட்டும் நாடகம்இல்லையா?
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'ஒரு மதத்தின் சொத்து வழிபாடு மற்றும் நிர்வாகத்தில், அரசு தலையிடக்கூடாது. எனவே, வக்ப் திருத்த சட்டம் செல்லாது' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். அப்படியானால், ஒரு மதச்சார்பற்ற அரசு, ஹிந்து கோவில்களை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம். கிறிஸ்துவ, முஸ்லிம் வழிபாட்டு தலம், சொத்து நிர்வாகத்தில் தலையிடாத மதச்சார்பற்ற அரசு, ஹிந்து மத விவகாரத்திலும் தலையிடாமல் இருப்பதுதான் சரியானது.
அதெப்படி... ஹிந்து கோவில்களின் வருமானம் இல்லாவிட்டால், அரசு தள்ளாடி போயிடுமே!
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேச்சு: ஒரு காலத்தில், சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது, திராவிட இயக்கம் தான். தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள குப்பனும், சுப்பனும், தங்கள் பெயருக்கு பின்னால் பட்டங்களை போட்டுக் கொள்வதற்கு காரணம், தி.மு.க., தலைவர்கள் தான்.
தி.மு.க., தலைவர்கள், தங்களது கைக்காசில் குப்பன், சுப்பனை படிக்க வச்சது மாதிரியே பேசுறாரே!

