PUBLISHED ON : பிப் 28, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தரக்குறைவான
வார்த்தைகளை உச்சரிப்பது, இளைய சமுதாயத்தை சீர்குலைக்கும் என்பது
தெரிந்தும், பணத்திற்காக புகழின் உச்சியில் இருக்கும் நடிகர்களே அவ்வாறு
பேசுவது சமுதாய சீர்கேடே. ஒரு படத்திற்கு பல கோடி பெறும் நடிகர்கள், தங்கள்
ரசிகர்களை, அவர்களின் எதிர்காலத்தை, அவர்களின் குடும்பங்களை சற்றேனும்
சிந்தித்து பார்த்து, பொறுப்புடன் நடந்து கொள்வது நலன் பயக்கும்.
இப்பவும்
அப்படி சிந்தித்து சில படங்களை எடுக்க தான் செய்கின்றனர்... ஆனால், அந்த
படங்களெல்லாம் திரைக்கு வந்த தடம் கூட தெரியாமல் வந்த வேகத்தில்
போய்விடுகிறதே!
பா.ம.க., தலைவர் அன்புமணிஅறிக்கை: காட்டை விட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வெளியே வருவதை கண்காணித்து, அவற்றை மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைக்க, தனிப்படைகள் அமைக்க வேண்டும். தனிப்படைகள் அமைக்கப்பட்ட ஆந்திரா, கர்நாடகாவில் மனித - விலங்குகள் மோதல் குறைந்திருக்கின்றன. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, விலங்குகள் ஊர்களுக்குள் வருகின்றன. காடுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, தற்காலிக தண்ணீர் தொட்டிகளை திறக்க வேண்டும்.
'விலங்குகளுக்கு கூட, திராவிட மாடல் ஆட்சி பிடிச்சு போய் தான் தமிழகத்திற்குள் வருகின்றன' என்று தி.மு.க., வினர் சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: தி.மு.க., அரசின் ஆசிரியர் விரோத போக்கு, கடும் கண்டனத்துக்கு உரியது. முந்தைய தி.மு.க., அரசில் உருவாக்கப்பட்ட ஊதிய முரண்பாட்டை களையாத நிலையில், 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறுவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.
தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் நடத்த ஆசிரியர்களை உசுப்பேத்தி விடுறாரோ?
அ.ம.மு.க., பொதுச் செயலர்தினகரன் அறிக்கை: தென்னிந்தியாவின் முதல் பல்கலையான சென்னை பல்கலையை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி, நிர்வாக குளறுபடிகளை சீர் செய்து, தமிழக அரசின் நிதி வழியாகவே, பல்கலை இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக அரசே நிதி நெருக்கடியில் இருந்து தங்களை காப்பாத்திக்க, மத்திய அரசிடம் நிதி கேட்டுட்டு இருக்கே!

