PUBLISHED ON : பிப் 20, 2024 12:00 AM

தி.மு.க., தலைமை நிலைய செயலர் பூச்சி முருகன் அறிக்கை: பிள்ளையை சுமந்து நிற்கும் கர்ப்பிணி போல காத்திருக்கும் நடிகர் சங்க
கட்டடத்தை பார்க்கும் போதெல்லாம் வேதனையாக இருக்கிறது. கட்டடப் பணி துவங்க
போதிய நிதி இல்லை என்றதும், அமைச்சர் உதயநிதி வழங்கியது நிதி அல்ல; நடிகர்
சங்கத்திற்கு ஆக்சிஜன். நிதியுடன் அவர் அளித்த உத்வேகமும், உறுதுணையாக
இருப்போம் என்ற நம்பிக்கையும் அளப்பரியது.
நடிகர் சங்க
உறுப்பினர்களான பல முன்னணி நடிகர்கள் கோடிகளில் புரள்பவர்கள் தானே...
ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத் தாலே, பிரசவம் ஆகிடுமே, அதாவது கட்டடம்
பூர்த்தியாகிடுமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: காவிரி குறுக்கே ஹேமாவதி அணையை கர்நாடக அரசு கட்டியபோது, அன்றைய முதல்வர் கருணாநிதி, அதை தடுக்க தவறியதை போல,மேகதாது விவகாரத்தில், இன்றைய முதல்வர் ஸ்டாலின், கூட்டணி தர்மத்தை காப்பாற்ற எண்ணி, அமைதி காத்து வருகிறார். கர்நாடக அரசின் அழுத்தம் காரணமாக,வாக்கெடுப்பு வாயிலாக இந்த விவகாரம், நீர்வள கமிஷனுக்கு அனுப்பப்பட்டதே தவறான முன்னு தாரணம். அது தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதெல்லாம் சரி... 'ஆளுங் கட்சிக்கு தோள் கொடுத்து, மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிப்போம்'னு சொல்லி சரியான முன்னுதாரணத்தை ஏற்படுத்துங்களேன்!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: கர்நாடக பட்ஜெட்டில் அம்மாநில முதல்வர் சித்தராமையா, 'மத்திய அரசு அனுமதி பெற்று, மேகதாது அணை கட்டப்படும். பணிகளை மேற்கொள்ள, பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன' என, தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கும், கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுக்கும் முயற்சிகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.
பிரதமருக்கு கடிதம் எழுதுறதும், நீதிமன்றத்தில் புதுசா வழக்கு போடுறதும் தான் இவர் சொல்ற முயற்சியா இருக்கும்!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் குறைந்தது 40 முதல் 94 சதவீதம் வரை விளைச்சல் குறைந்துள்ளது. விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்க, தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
நிவாரணம் கொடுத்து கொடுத்தே தமிழக அரசின் கஜானா காலியாகிடும் போலிருக்கே!

