PUBLISHED ON : பிப் 05, 2024 12:00 AM

காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் பேட்டி:
தமிழகத்தில் லோக்சபா
தேர்தலில், பா.ஜ., எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் அவர்கள்,
'டிபாசிட்' இல்லாத வகையிலும், 'நோட்டா'வை விட குறைந்த ஓட்டு பெறும்
வகையிலும், நாங்கள் பணி செய்வோம். லோக்சபா தேர்தலில் ஈரோட்டில், காங்.,
நிற்க வேண்டும் என்பது விருப்பம். அதே நேரம், கூட்டணியினர் நின்றாலும்,
நாம் வெற்றி பெற செய்வோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்
இவரையே, தி.மு.க., தான் தேர்தல் வேலைகளை முழுக்க பார்த்து, ஜெயிக்க வைத்தது
என்பதை மறந்துட்டாரா?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: அரசு டாக்டர்களுக்காக, கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணை, 354 குறித்து ஆராய குழு அமைக்கப்படுவதாக தற்போதைய தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, மருத்துவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
எந்த ஒரு விஷயத்தையும் கிடப்பில் போடணும்னா மட்டும் தான், 'கமிட்டி' போடுவாங்க... அரசாணை, 354ஐ மறந்துட வேண்டியது தானோ!
தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் வாழப்பாடி, ராம.சுகந்தன் அறிக்கை: 'தி.மு.க., துவக்கி, 18 ஆண்டுகளிலும், அ.தி.மு.க., ஆரம்பித்து, ஐந்து ஆண்டுகளிலும் ஆட்சிக்கு வந்தனர். ஆனால், பா.ம.க., துவங்கி, 34 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை' என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி நெஞ்சுருக ஆதங்கப்பட்டு உள்ளார். உண்மை தான், வன்னியர் சமுதாயத்திற்கு தேவை புதிய தலைமை. இதுவரை ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை நம்பி ஏமாந்தது போதும்.
அதானே... தமிழகத்தில் காங்கிரஸ், ஆட்சியை பறிகொடுத்து, 57 வருஷமாச்சே... இவங்க ஏதாச்சும் ஆதங்கப்படுறாங்களா என்ன?
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை: மத்திய அரசின் விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் துாத்துக்குடி விமான நிலையம் இயங்குகிறது. தற்போது விமான நிலையம் பல நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. புதுப்பொலிவுடன் விரைவில் திறக்கப்படஉள்ள இந்த விமான நிலையத்திற்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும்.
என்ன அதிசயம்... இவங்க வழக்கமா, கருணாநிதி பெயரை தவிர, வேறு யார் பெயரையும் கனவுல கூட நினைச்சு பார்க்க மாட்டாங்களே!

