PUBLISHED ON : டிச 16, 2024 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
'பெஞ்சல்'
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல இடங்களில் நிவாரண உதவிகள் சென்று
சேரவில்லை. அதனால், ஆங்காங்கே மக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மழை
பாதிப்புகளை முழுமையாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகை
வழங்க வேண்டும்.
நிவாரணம் வழங்குறதுல இருக்கிற சிக்கல்கள் எல்லாம், முதல்வரா இருந்த இவருக்கும் நல்லாவே தெரியும் தானே!
விக்கிரவாண்டி தொகுதி, தி.மு.க., -- எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பேச்சு: தமிழ் சமுதாயத்திற்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்த பாரதிதாசனுக்கு, தமிழகத்தில் ஒரு மணி மண்டபம் அமைக்க வேண்டும். அன்னியூரில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு தனி கட்டடம் கட்ட வேண்டும்.
சட்டசபையில் பேசுறதுக்கு முன்னாடி, இதையெல்லாம் பேசலாமான்னு மாவட்ட அமைச்சர் பொன்முடிகிட்ட பேசி அனுமதி வாங்கிட்டாரா?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்பட்ட, 1 லட்சத்திற்கும் அதிக கன அடி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வட மாவட்டங்களில் பல கிராமங்களை சூழ்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்தது. மழை பாதிப்புக்கு பிறகு, காரணத்தை தேடாமல், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி, முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரியை, அ.தி.மு.க., ஆட்சியில திறந்தாங்க... சாத்தனுார் அணையை, தி.மு.க., ஆட்சியில திறந்தாங்க... கணக்கு சரியா போச்சு!
புதிய தமிழகம் கட்சி தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: இந்தியாவில் ஒவ்வொரு தேர்தல் அறிவிப்பின் போதும், தேர்தல் விதிமுறைகளை அமலாக்க வேண்டிய சூழல் காரணமாக, அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போகிறது. தேர்தல் முறைகளை மாற்றாமல், இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவு காலத்தை உருவாக்க இயலாது. அதற்கு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை, மத்திய அரசு முன்மொழிந்து இருக்கிறது. மத்திய அரசின் இந்த கோட்பாட்டை, நாங்கள் வரவேற்கிறோம்.
பொதுநல கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் மட்டுமே, மத்திய அரசின் இந்த அணுகுமுறையை வரவேற்பர்!

