PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தில் தி.மு.க.,
ஆட்சி பொறுப்பேற்ற பின், முதலீடுகளை ஈர்க்கவோ, இளைஞர்களுக்கான வேலை
வாய்ப்புகளை உருவாக்கவோ, எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல்,
ஊர் ஊராக சென்று, ஈர்க்காத முதலீடுகளை ஈர்த்ததாகவும், உருவாக்காத வேலை
வாய்ப்புகளை உருவாக்கியதாகவும், முதல்வர் பெருமை பேசி நாடகமாடுவது, மக்களை
ஏமாற்றும் செயல்.
முதலீடு விஷயத்தில் மட்டும்தான் மக்களை ஏமாத்துறாங்களா என்ன?
தமிழக முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தி.மு.க., கூட்டணி குறைந்தபட்சம், 35 சதவீத ஓட்டுகளை பெற்றாலும், மீதமுள்ள 65 சதவீதத்தை, அ.தி.மு.க., - -பா.ஜ., - த.வெ.க., - நா.த.க., ஆகிய கட்சிகள் தனித்தனியாக நின்று பல திசைகளிலும் பிரிக்கும் ஓட்டுகளால், தி.மு.க.,வே மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும்.
இவங்க எல்லாம் ஒன்று சேர்ந்தால், தி.மு.க., ஆட்சியை வீழ்த்த முடியும்... ஆனா, நவகிரகங்கள் ஒன்று சேருமா?
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி பேச்சு: நமக்கு முதல் மற்றும் கடைசி எதிரி தி.மு.க.,தான். கருணாநிதி, ஸ்டாலினை உருவாக்கினார். ஸ்டாலின், தன் மகனை உருவாக்கினார். எம்.ஜி.ஆரால் வாழ்வு பெற்றவர் துரைமுருகன். கருணாநிதிக்கு பின், துரைமுருகனால் அந்த இடத்துக்கு ஏன் வர முடியவில்லை. மகனை, பேரனை ஏற்றுக் கொண்டார். காரணம், கட்சி விசுவாசம் கிடையாது; பதவி வெறி. பதவியை தக்க வைக்க, பேரன் தலைமையை கூட ஏற்றுக் கொள்கிறார்.
சரியா போச்சு... எதிர்த்து கேள்வி கேட்டு ஓரம் கட்டப்படுவதை விட, கருணாநிதியின் கொள்ளு பேரன் காலம் வரை அமைச்சராகவே காலம் தள்ளிடணும்னு அவர் தெளிவாதான் இருக்கார்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு: கருணாநிதி போன்றே ஸ்டாலினும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். தி.மு.க., அரசின் சாதனைகளாக, தமிழகம் முழுதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது; போதை பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. முதல் முறையாக, முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தை துவக்கி உள்ளோம். இனி, தமிழகம்முழுதும் தொடர்ந்து நடக்கும்.
இவ்வளவு நாளா அமைதியா இருந்துட்டு, இப்ப ஆர்ப்பாட்டம் பண்றது எல்லாம் சட்டசபை தேர்தலுக்காக தான்னு நல்லாவே தெரியுது!

