PUBLISHED ON : அக் 28, 2024 12:00 AM

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு பேட்டி:
நடிகர்
விஜய், கருத்தியல் மற்றும் தத்துவ ரீதியாக தமிழக மக்களின் உரிமைக்காக எந்த
போராட்டத்திலும் ஈடுபடவில்லை. அவர் சினிமாவுக்காக, கேமரா முன் நின்று
நடிப்பவர். அரசியலுக்கு வர தகுதியற்ற விஜய், நாட்டை ஆள மக்கள் அனுமதிக்கக்
கூடாது. மக்களுக்காக எந்த உதவியும் செய்யாத அவருக்கு மக்கள் ஓட்டு
போடக்கூடாது.
அரசியல் களத்துல போராட்டத்துக்கு பெயர் போன,
'காம்ரேட்'களே அடக்கி வாசிக்கிறாங்க... விஜய், இப்ப தானே களத்துக்கு
வர்றார்... மக்கள் பார்த்துட்டு முடிவு பண்ணுவாங்க!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: ஈழத்தாயக விடுதலை போராட்டத்தை இழிவுப்படுத்தும், ஒற்றை பனைமரம் திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக் கூடாது. தாய் மண்ணின் விடுதலைக்கு போராடி, தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் யாதொரு பொய் பிரசாரத்தையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
அந்த படத்துக்கு பைசா செலவில்லாமல், முழு, 'புரமோஷன்' வேலையையும் இவரே செஞ்சிடுவார் போலிருக்கே!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: 'மதுரை ரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாக தமிழர்களின் வேலைவாய்ப்பு, கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது' என, 'தினமலர்' நாளிதழில் கட்டுரை வெளியாகி இருக்கிறது. ரயில்வே நிர்வாகத்தின் இச்செயல் கண்டனத்துக்கு உரியது. ஏற்கனவே நான் பலமுறை ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்தும், பார்லிமென்ட் கூட்டங்களிலும் வலியுறுத்தினேன்; நல்ல முடிவு எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. மக்கள் நலன் சார்ந்த செயல்களில், ம.தி.மு.க., சமரசமின்றி போராடி வருகிறது.
தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் உள்ள இவங்க கூட்டணி கட்சி, எம்.பி.,க்கள் களத்துல இறங்கி போராடி தான் தடுக்க முடியும்!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தி.மு.க.,வின் செல்வாக்கு சரிவதாக கூறுகிறார். எதிர்க்கட்சிக்காரர் அப்படி தான் கூறுவார். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அவரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
அப்ப, இவங்க ஆட்சிக்கு எதிரா பழனிசாமி இன்னும் தீவிரமா செயல்படணும்னு சொல்றாரா?

