PUBLISHED ON : அக் 23, 2024 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணைச் செயலர், டாக்டர் சரவணன் பேச்சு: தேர்தலுக்கு
முன், 'ஸ்டாலின் தான் வாராரு...விடியல் தரப் போறாரு...' என்றனர்.
தற்போது,'முதல்வராக ஸ்டாலின் வந்துட்டாரு... நீச்சல் அடிக்க விட்டாரு...'
என, மக்கள் பாடும் நிலை தான் உள்ளது. துணை முதல்வர் உதயநிதி கார் ரேஸ்
நடத்திய போது, சாலையில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. அதில் காட்டிய அக்கறையை,
50 சதவீதம் செய்தாலே, சென்னையை மழையில் இருந்து காப்பாற்ற முடியும்.
சென்னையில் தேங்கும் மழை வெள்ளத்தை பார்த்துட்டு, அடுத்து கேரளா பாணியில் படகு ரேஸ் நடத்தாம இருந்தா சரிதான்!
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க தலைவர் லியாகத் அலிகான் பேட்டி: அரசியல் அனுபவம்இல்லாத உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி கொடுக்கப்பட்டதாக, பா.ஜ., தலைவர்கள்கொக்கரிக்கின்றனர். தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலையை நியமித்த போது, அவருக்கு அரசியல் அனுபவம்இருந்ததா என்பதை ஏன் பா.ஜ.,வினர் உணரவில்லை. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பதை போல, கருணாநிதி குடும்பத்தினருக்குஉழைக்கத் தெரியும்.
தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு, கருணாநிதி குடும்பம் மட்டும் தான் உழைச்சிருக்கா என்ன?
தமிழக பா.ஜ., பிரமுகரும்,நடிகருமான சரத்குமார் அறிக்கை: வி.சி.,க்கள் மது ஒழிப்பு மாநாடு நடத்தி, மத்திய அரசு மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ள நிலையில், 'டாஸ்மாக்' கடைகளில் காத்திருப்பு நேரத்தை குறைக்க, கூடுதல் கவுன்டர்கள், பல இடங்களில் கியூ.ஆர்., கோடு வசதி போன்ற புதிய வியாபாரயுக்திகளை அரசு அறிவித்துஇருப்பது, மதுவிலக்கு குறித்த அரசின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது.
இதிலிருந்து திருமாவும் மது ஒழிப்புக்கு மாநாடு நடத்தலை; தி.மு.க.,வுக்கும் அந்த எண்ணம் துளியும் இல்லைன்னு தெளிவா தெரியுதே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அவர்களை நியமிப்பதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் துவங்கப்பட்ட பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, அந்த பணிகளுக்காக காத்திருக்கும் தேர்வர்களிடையே ஏமாற்றத்தையும்,கவலையையும் ஏற்படுத்திஉள்ளது.
அது சரி... புதுசா பணிக்கு ஆள் எடுத்தால், சம்பளம் கொடுக்க அரசுக்கு பணம் வேணுமே!

