PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
தி.மு.க.,வில்
முன்நிறுத்தப்படும் வாரிசுகள், தயாநிதி, உதயநிதி, கவுதம சிகாமணி,
டி.ஆர்.பி.ராஜா, ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் தங்களை நிலை நிறுத்திக்
கொண்டு, கட்சிக்கும் பயனாகின்றனர். அ.தி.மு.க.,வில் வாரிசு களுக்கு
கிடைக்கும் வாய்ப்பு, விழலுக்கு இறைக்கப்பட்ட நீராக வீணாகத்தான் போகிறது.
ராஜ்சத்யன், ஜெயவர்தன் என, இதற்கு ஏராளமான சாட்சிகள்.
இவரது தலைவர் பன்னீர்செல்வத்தின் வாரிசு ரவீந்திரநாத்தை ஏன் விட்டுட்டாரு?
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு வாழ்த்துகள். வாரிசு அரசியலை பற்றி பேச, பா.ஜ.,விற்கு தகுதியில்லை. ராஜ்நாத்சிங், அமித் ஷா என, மொத்தம், 60 பா.ஜ., தலைவர்களின் வாரிசுகள் நேரடி அரசியலில் உள்ளனர். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில், 'இந்தியாவிலேயே சிறந்த குடும்பம்' என பாராட்டு தெரிவித்த பா.ஜ., இன்று ஏன் எதிர்வினையாற்றுகிறது.
நேரு குடும்பத்தை விமர்சிக்கும் பா.ஜ., கருணாநிதி குடும்பத்தை புகழ்ந்தது இவருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்குமோ?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நடக்கும் அவலங்களையும், பினராயி விஜயனின் ஊழல்களையும் உரக்கச் சொல்லி வரும் அக்கட்சி எம்.எல்.ஏ., பி.வி.அன்வரின் கை, கால்களை வெட்டி ஆற்றில் வீசுவோம் என, பொது இடத்தில் மிரட்டல் விடுத்து பேசுகின்றனர். அன்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர். அவருக்கு ஆதரவாக, பொதுவுடமை சித்தாந்தம் பேசும் நம்ம ஊர் பாலகிருஷ்ணன் ஏன் குரல் கொடுக்கவில்லை?
பக்கத்து மாநிலங்கள்ல நடக்கிற பா.ஜ., உள்கட்சி பஞ்சாயத்துல கருத்து சொல்ற அதிகாரம் இவருக்கு மட்டும் இருக்குதா, என்ன?
பாரத் ஹிந்து முன்னணி தலைவர் பிரபு அறிக்கை: தமிழகத்தில் பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்துவது வியப்பாக இருக்கிறது. சென்னை, ராயப்பேட்டையில், ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஹசன் நஸ்ரல்லாவை, மாவீரனாக சித்தரித்து, பேனர் வைத்து அஞ்சலி செலுத்தி உள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடப்பது திராவிட மாடல் ஆட்சி... இங்க ஆன்மிக நிகழ்ச்சி நடத்தணும்னா தான் ஆயிரத்தெட்டு அனுமதி வாங்கணும்!

