PUBLISHED ON : செப் 30, 2024 12:00 AM

த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா அறிக்கை: தி.மு.க., ஆட்சி
பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில், மழை வரும் போதெல்லாம் சென்னை மக்கள் வெள்ள
பாதிப்பால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு முறையும்
மக்கள் பாதிக்கப்பட்ட பின், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றுகிறது.
இதற்கு, அரசின் நிர்வாக திறமையின்மையும், அலட்சியமும் தான் காரணம்.
தி.மு.க., ஆட்சிக்கு முன், மழை வரும் போதெல்லாம் சென்னை மக்கள் ஆடி, பாடி ஆட்டமா போட்டாங்க... அப்பவும் அவஸ்தை தானே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டால், வாழைப்பழ காமெடி போல, 'தொழில் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையே, வெள்ளை அறிக்கை தான்' என்று முதல்வர் கூறுகிறார். மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் கொள்ளத் தேவையில்லை. வெள்ளை அறிக்கை வெளியிட தயங்குவதிலிருந்தே, முதலீடுகள் வரவில்லை என்பது உறுதியாகிறது. வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; இல்லாவிட்டால் முதலீடுகளை ஈர்ப்பதில் ஏற்பட்ட தோல்வியை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு தொல்லை கொடுக்க தான் நீங்க வெள்ளை அறிக்கை கேட்குறீங்கன்னு முதல்வருக்கு தெரியாதா என்ன?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி: அ.தி.மு.க.,வில் பிரிந்திருக்கும் சக்திகள், தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது. லோக்சபா தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை கேட்டு வாங்கி, ஏழு இடங்களில், 'டிபாசிட்' பறி போய் உள்ளது; 13 இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளிலும் பின்னடைவு ஏற்பட்டு, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான்.
கடந்த, 2004 லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் தோற்றது இவருக்கு மறந்து போச்சா?
தமிழக, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: நாட்டின் வளர்ச்சிக்கும், ஹிந்துக்களின் ஒற்றுமைக்கும் பாடுபட்டு வரும் வலிமையான, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை கண்டு பதைபதைக்கிறது, தி.மு.க.,
அரசு. ஆர்.எஸ்.எஸ்., எழுச்சிக்கு, இனி தமிழகத்தில் அணை போட முடியாது என்பதை உணர வேண்டும்.
அணை போட முடியாதுனு தெரிஞ்சு தானே, அனுமதி கொடுக்காம எதை எதையோ கூறி தடை போட முயற்சிக்கிறாங்க!

