PUBLISHED ON : செப் 27, 2024 12:00 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
தி.மு.க.,
பவள விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கருணாநிதி பேசியபோது,
முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிப் பெருக்கோடு இருந்ததை காண முடிந்தது. அந்த
தொழில்நுட்பத்தின் வாயிலாக, 'அரசு மருத்துவர்களுக்காக நான் வெளியிட்ட
அரசாணைக்கு, என் மகனே தடை போடுவதுநியாயமா?' என கருணாநிதி கேள்வி கேட்டால்,
அடுத்த நிமிடமே முதல்வர் அரசாணை 354ஐ அமல்படுத்துவார்.
உணர்ச்சிப் பெருக்கோடு இருக்கிற முதல்வரை, ஊதிய உயர்வு கேட்டு கோபத்துல கொந்தளிக்க வச்சிடுவாங்க போலிருக்கே!
பா.ம.க., தலைவர் அன்புமணிஅறிக்கை: இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்று உள்ள நிலையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்,இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டு பணிக்குழு அமைத்து பேச்சு துவங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இலங்கை புதிய அதிபரின் அணுகுமுறை, இந்தியாவுக்கு சாதகமா இருக்கும்னு நினைக்கிறாரோ?
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: தமிழிசை, 'மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி' என, பேசியிருக்கிறார். சர்வாதிகாரியாக செயல்படும் மோடியின் ஆட்சியை, காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது, தமிழிசை யின் அறியாமையைக் காட்டுகிறது. காமராஜர் ஆட்சி குறித்து குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாவிட்டால், 'காங்., தலைமையில் காமராஜர் ஆட்சி அமைப்போம்' என்ற நோக்கத்துடன், குமரியில் இருந்து சென்னை வரை பாத யாத்திரை சென்ற தன் தந்தை குமரி அனந்தனிடம் கேட்டு அறியலாம்.
அதெல்லாம் தெரியாமலா இருக்கும்... உங்களுக்கு காமராஜரை நினைவுபடுத்த அப்படி சொல்லி இருப்பாங்க!
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க மாநிலத் தலைவர் லியாகத் அலிகான் அறிக்கை: முதல்வர்ஸ்டாலினின் தீர்க்கமான திட்டங்களை அனைத்து மாநிலங்களும் ஏற்று, செயல்படுத்தத் துவங்கி விட்டன. கர்நாடகாவில் மகளிர் உதவித்தொகை, இலவச பஸ் வசதி கொண்டு வரப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானாவிலும் தமிழக அரசின் திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன.
அப்ப, அந்தந்த மாநிலங்களும் கஜானாவை காலி செஞ்சிட்டு, சீக்கிரம் கட்டணத்தையும், வரியையும் ஏத்தி மக்கள் தலையில் சுமையை துாக்கி வச்சிடுவாங்கன்னு சொல்றாரோ?

