PUBLISHED ON : ஆக 12, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு தொடர்ந்து சீரழிந்து கொண்டே இருந்தால், தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களுக்கு,
வெளிமாநிலங்களில்
சென்று முதலீடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. வெளி மாநிலங்களில்
இருந்து, தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்கு பதிலாக, நம்
மாநிலத்தில் இருந்து
வெளி மாநிலங்களுக்கு முதலீடு செல்வது வருத்தம் அளிக்கும் செயல்.
ஆளுங்கட்சிக்கு வேணும்னா வருத்தம் இருக்கும்... அதை வைத்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளுக்கு ஏன் வருத்தம்?
தமிழக கட்டுமான தொழி லாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் பேட்டி:
முதல்வர் ஸ்டாலின், 6,000 கோடி ரூபாய் கடனோடு தான் ஆட்சி பொறுப்பேற்றார். மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம், காலை உணவு திட்டம் என, மாதந்தோறும் செலவிட வேண்டியுள்ளது... அரசு பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது. மற்ற வாரியங்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது; இதனால் தான், கட்டுமான தொழிலாளர் பென்ஷன் உயர்வு கோரிக்கையை அரசு நிறுத்தி வைத்துள்ளது.இருக்கிற கடனை அடைக்காம, இலவச திட்டங்களை அள்ளி வீசுற திராவிட மாடல் ஆட்சியில், கட்டுமான தொழிலாளருக்கு
மட்டுமல்ல; யார் கோரிக்கையும் நிறைவேறாது!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி:
தமிழகத்தில், பா.ஜ., வளர்ச்சி அடைவதை பொறுக்க முடியாதவர்கள், அண்ணாமலை குறித்தும், பா.ஜ., குறித்தும் அவதுாறுகளை பரப்புகின்றனர். வரும், 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதி. ஒரு சினிமா காமெடியில், 'இந்த, சைடு ரோல் எல்லாம் வேணாமா... நேரா ஹீரோ தானா...' என,
கேட்பாங்க... அப்படி தான் இவரிடம் கேட்க தோணுது!
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேச்சு:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், இதுவரை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இத்துடன் விட்டு விடுங்கள். ஒரு ஆண்டு மட்டும், கடினமாக உழையுங்கள். பொதுத்தேர்வுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. இனி, பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள்; ஒவ்வொரு நாளும், என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இதில் அலட்சியமாக இருந்தால், வாழ்க்கை முழுதும் கஷ்டப்பட வேண்டியதாகி விடும்.நல்ல, 'அட்வைஸ்' தான்... ஆனா, அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுக்கு எடுத்த பாடத்தை, அப்படியே நீங்க, மாணவர்களிடம் ஒப்புவிப்பது போல பேச்சு, பேட்டி, அறிக்கை இருக்கே!

