PUBLISHED ON : ஆக 19, 2024 12:00 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சி மருத்து வர்கள், முதுகலை மருத்துவர்களுக்கு தங்குமிடம் வசதி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய காவலர்களை நியமித்து, மருத்துவர் பணி பாதுகாப்பை, 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும்.
சம்பள உயர்வு கேட்ட டாக்டர்களை, 'எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க'னு கேட்க வச்சி, திசை திருப்பி விட்டுட்டாங்க பாத்தீங்களா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: வயநாடு நிலச்சரிவையும், முல்லை பெரியாறு அணையையும் தொடர்புபடுத்தி, கேரளாவில் செய்யப்படும் பொய்யான, அபத்தமான பிரசாரம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்திற்கு எதிரான உணர்வுகள், கேரள மக்களிடையே விதைக்கப்படுவது ஆபத்தானது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி, அணையை வலுப்படுத்தும் பணிகளை, தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
அண்டை மாநிலங்களில் ஒரு பேரழிவுனா முதலில் பதறுவது தமிழனின் மனம் தான்... ஆனாலும், தமிழகத்திற்கு எதிரா விஷம பிரசாரம் ஏன் தான் இப்படி நடக்கிறதோ?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி பேட்டி:
'தமிழக மீனவர்கள் எல்லை மீறி செல்வதால் தான் கைதாகின்றனர்' என்ற கருத்தில் தான், வெளியுறவு துறை உள்ளது. கச்சத்தீவை நாம் நிரந்தரமாக மீட்க முடியாவிட்டாலும், அப்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையையாவது இந்தியா நிச்சயம் மீட்க முடியும். ஆனால், மத்திய அரசு செய்ய மறுக்கிறது.
இதையெல்லாம், பார்லிமென்டில் விரிவா பேசி இருக்கலாமே... நேரம் ஒதுக்கலையா?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில், சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி உள்ளிட்ட, 13 மருத்துவ கல்லுாரி களின், 'டீன்' பணியிடங்கள் நான்கு மாதங்களாக காலியாக உள்ளன. மருத்துவ கல்லுாரிகளின் டீன் பணியிடம், ஒரு நாள் கூட காலியாக இருக்கக் கூடாது. சென்னைப் பல்கலை உள்ளிட்ட ஐந்து பல்கலைகளின் துணைவேந்தர் பணியிடங்கள் கவர்னருக்கும், அரசுக்கும் இடையிலான மோதல் காரணமாக, பல மாதங்களாக நிரப்பப்படா மல் உள்ளன. ஆனால், மருத்துவ கல்லுாரி டீன் பணியிடங்களை நிரப்புவதில் அத்தகைய முட்டுக்கட்டைகள் எதுவும் இல்லை.
யாரோ ஒருவர், 'கட்டை' போடாமல் உயர் பதவி பணியிடங்களை காலியா வைப்பாங்களா... பேச்சு, பேட்டி, அறிக்கை ஏதாவது காரணம் இருக்கும்!

