PUBLISHED ON : செப் 17, 2024 12:00 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
சென்னை,
மந்தைவெளி பஸ் நிலையம் அருகே, புதிதாக டாஸ்மாக் கடை திறந்ததை எதிர்த்து,
ஆர்ப்பாட்டம் செய்தோரை, போலீசார் கையாண்ட விதம் மிகவும் மோசமானது. பெண்களை
தரதரவென இழுத்துச் சென்றது, காவல்துறையினர் மீதுள்ள மதிப்பை குறைக்கிறது.
பஸ் நிலையத்தில் டாஸ்மாக் இருந்தால், போதையில் உள்ள கூட்டத்துடன்,
பெண்களும், மாணவியரும் எப்படி பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியும்.
கவலையேபடாதீங்க... பெண்கள், மாணவியர் மீது மிகுந்த அக்கறையுள்ள திராவிட மாடல் அரசு, பஸ் நிலையத்தை இடம் மாத்திடும்!
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்கின்றனர். அந்த படிகள் மொத்தம் எத்தனை என்பதை சொன்னால் நன்றாக இருக்கும். மறைந்து ஒளிந்து, கூச்சத்தோடு குடித்தவர்களுக்கு, பார்கள் அமைத்து கொடுத்து, குடி பெருமை போற்றும் திராவிட மாடல் அரசு, குறைந்தபட்சம் மதுவிலக்குக்கு முன்னோட்டமாக, ஒட்டுமொத்த பார்களையும் மூடி, முதல் படியில் கால் வைக்கலாமே.
அப்புறம் தெருவில் நின்று குடிக்கிறவங்களால, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லன்னு நீங்களே குற்றஞ்சாட்டுவீங்களே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் பஸ் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், நகரத்திற்கு வெளியே, 8.5 கி.மீ., தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் நிலவணிக நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை பல கோடி உயர்த்தும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
ஆளுங்கட்சி புள்ளிகள் வாங்கி போட்டிருக்கிற இடத்தின் மதிப்பை வேறு எப்படி உயர்த்துவதாம்?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: தி.மு.க., அரசு, 2016ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்றால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவதாக அறிவித்தனர். ஆனால், தற்போது அதற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். 2021ல் தி.மு.க., அரசு ஆட்சிக்கு பின், தமிழகத்தில் மது விற்பனை வாயிலாக வருவாய் அதிகரித்து வருகிறது.
அவங்க, 2016 தேர்தலில் தந்த வாக்குறுதியால் தான், ஆட்சிக்கு வர முடியலை என்ற உண்மையை உணர்ந்து, 'ரூட்'டை மாத்திக்கிட்டாங்க!

