PUBLISHED ON : செப் 16, 2024 12:00 AM

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை:
'மதுக்கடை
நடத்துவதில் முதல்வருக்கு விருப்பம் இல்லை. கொஞ்சம், கொஞ்சமாக
மதுக்கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைச்சர்
முத்துசாமி தெரிவித்துள்ளார். இன்று போய் நாளை வா என்று சொன்னால்
தீர்மானிக்க முடியாது என்பது போல், அவரது பேச்சு உள்ளது. கடைகளை
மூடும் முன், மது உற்பத்தி ஆலைகளை மூடுங்கள். எரிவதை பிடுங்கினால்,
கொதிப்பது அடங்கி விடும்.
'சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நின்னுடும்'னு சொல்றாரோ?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'படிப்படியாக மதுக்கடைகளை மூடுகிறோம் என்று சொன்னார்கள்; மூடவில்லை. அவற்றை மூட வேண்டும் என்று தான் போராட்டம்' என, திருமாவளவன் கூறி உள்ளார். ரொம்ப கோபமாக இருக்கிறாரே. இப்படியே சென்றால் அனைத்து வி.சி., கட்சி எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களும் ராஜினாமா செய்து விடுவர் எனக்கூறி போராட்டத்தை நிறைவு செய்வாரோ?
போராட்டம் நடத்தி தேர்தலுக்கு சீட் எண்ணிக்கையை உயர்த்த பிளான் போடுறவரிடம், ராஜினாமா எல்லாம் நோ சான்ஸ்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: அரசு போக்குவரத்து கழகங்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் கடன் பெற்றவர்களின் கடன் தொகையை, சம்பளத்தில் பிடித்தம் செய்துள்ளது. ஆனால், சங்கத்தில் செலுத்தவில்லை. இதனால், சங்கம் மீண்டும் கடன் வழங்க முடியாத நிலையும் சங்க உறுப்பினர்கள்,
மத்திய கூட்டுறவு வங்கியிலும் கடன் பெற முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய பொதுத்துறை நிறுவனமே, இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கடும் கண்டனத்துக்கு உரியது.
ஊழியர்கள் சம்பளத்தில் பிடிச்சு தான், மகளிருக்கு இலவச பஸ் பயணம் எல்லாம் கொடுக்குறாங்களோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தனக்கு வாய்ப்பு தராத தன் தேசத்தின் மீது, காங்கிரஸ் ராகுலுக்கு வெறுப்பு வந்து விட்டதோ என்னவோ. அமெரிக்கா, கனடா என அயல்நாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், அவர் இந்தியாவை தாழ்த்தி பேசுகிறார். கூடவே இந்திய எதிர்ப்பாளர்களோடு நெருக்கமும் காட்டுகிறார்.
உலக நாடுகளின் தலைவர்கள் மோடியை புகழ புகழ, ராகுல் வெளிநாட்டில் கொதிப்பது
அதிகமாகிட்டே போகுதே!

