PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
'கலைஞர் எனும் தாய்' நுால் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
'கருணாநிதி எனக்கு தந்தை மட்டுமல்ல; தாயும் அவர் தான்' என, உணர்வுப்
பூர்வமாகதெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தன் தந்தை வெளியிட்ட அரசு
டாக்டர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான அரசாணை, 354க்கு உயிர் கொடுக்காமல்,
கிடப்பில் வைத்திருப்பது வேதனை அளிக்கிறது.
இப்போதைக்கு தன்
தந்தையை விட, மகனுக்கு தான் முதல்வர் அதிக முக்கியத்துவம் தருவார்...
டாக்டர்கள் பேசாம உதயநிதியிடம் முறையிட்டால் ஏதாவது நடக்கலாம்!
தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா பேச்சு: தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், பேட்டை தாதா போல, 'என் ஏரியாவுக்கே நீ வந்துட்டே' என்கிறார். ஓர் அமைச்சர் பல்லாவரத்தில் பேசும்போது, 'நான் இந்த நாட்டின் பிரதமரை, பீஸ் பீஸாக வெட்டுவேன்' என்றார். அந்த அமைச்சரை, முதல்வர் இன்னும் பதவியில் வைத்துள்ளார் என்றால், அந்த விஷ ஜந்துவின் கருத்தை ஆதரிப்பதாக தானே அர்த்தம்.
இதுபோன்ற, 'மாஸ்' மிரட்டல்பேச்சுகள் தான், அமைச்சர் பதவிக்கான அரிச்சுவடியோ?
பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,ஜெயராமன் பேட்டி: திருப்பூரில்சொத்து வரி, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்; பலர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இங்குள்ள தொழில்களை காப்பாற்றாமல், அமெரிக்காவில் உள்ள தொழில் துறையினரை சந்தித்து, 'தமிழகத்தில் தொழில் துவங்க வாருங்கள்' என, ஸ்டாலின் வேண்டுகோள் விடுக்கிறார்.
இதே கேள்வியை, கடந்த ஆட்சியில் பழனிசாமி அமெரிக்கா சென்றபோதும்இவர் கேட்டிருக்கலாமே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மகா விஷ்ணு கைது எதிர்பார்த்ததுதான்; ஆனால், சுய சிந்தனையோ, சட்ட அறிவோ இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் அவசர அலங்கோல நடவடிக்கை. உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, தி.மு.க., அரசு தான்தோன்றித் தனமானநடவடிக்கைகளால், பல்வேறு வழக்குகளில் நீதிபதிகளிடம் குட்டு பட்டதை விட, மிக அழுத்தமாக விமர்சிக்கப்படும்.
அரசியலுக்காக செய்யப்படும், 'அரெஸ்ட்'களில் குட்டு வாங்குறதுல தான், இப்ப மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய போட்டியே நடக்குதே!

