PUBLISHED ON : ஜூன் 01, 2024 12:00 AM

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை: 'நாங்கள் ஆட்சிக்கு
வந்த பின், அரசு பஸ்களில், பெண்கள் 450 கோடி முறை இலவசமாக பயணம்
செய்துள்ளனர்' என, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது. திருநங்கையர்,
மாற்றுத்திறனாளிளின் இலவச பயணத்தையும் பட்டியலிட்டுள்ளது. தெலுங்கானாவில்
பெண்கள் அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல தமிழகத்திலும் வழங்க வேண்டும்.
எல்லா பஸ்களிலும் பெண்களை இலவசமா பயணிக்க அனுமதித்தால், பஸ் தொழிலாளர்களுக்கு யார் சம்பளம் தர்றது?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: 'ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது' என, கடந்தாண்டு நவ., 10ல், உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின், சூதாட்ட தற்கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த 15 நாட்களில், ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றால் மட்டுமே ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்ட முடியும். தமிழக அரசு தடை பெற வேண்டும்.
பேசாம தற்கொலைகளின் பட்டியலுடன், பா.ம.க.,வே உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடுத்துட வேண்டியது தானே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: பால் விலை உயர்வு, பால் பொருட்களின் விலை உயர்வு, தரமற்ற பால் வினியோகம், எடைக் குறைவு, பால் பொருட்கள் தட்டுப்பாடு என, பல தொல்லைகளுக்கு ஆவின் நிறுவனம் ஆளாகியுள்ளது. தற்போது காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வது பேரதிர்ச்சியை அளிக்கிறது. இது வேலியே பயிரை மேய்வதற்கு சமம். முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லா விஷயத்துலயும் முதல்வரே நடவடிக்கை எடுக்கணும்னா துறைக்கு தனியா அமைச்சர், அதிகாரிகள் எல்லாம் எதற்கு?
அ.ம.மு.க., பொதுச் செயலர்தினகரன் அறிக்கை: சுகாதார துறையில் அடிப்படை வசதி யின்மை, டாக்டர்கள், செவிலியர்கள், பற்றாக்குறை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என்ற தொடர் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதி முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல் இழந்திருக்கும் சுகாதாரத் துறையை மீட்டெடுத்து, மக்களுக்கு தரமான மருத்துவம் கிடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மக்களின் சுகாதாரத்தை விடுங்க... காடு, மலை, ரோடுகளில் எல்லாம் மாரத்தான் ஓடி நம்ம சுகாதார அமைச்சர் அவரது உடல் நலத்தை எப்படி பேணி காக்கிறார் பாருங்க!

