PUBLISHED ON : மே 23, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தெலுங்கானாவில், அரசின் நேரடி
நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்படும் சன்ன ரக நெல்
குவிண்டாலுக்கு,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில
அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு
குவிண்டாலுக்கு குறைந்தது, 700 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
எப்படியும் அவங்க தரமாட்டாங்க... அதனால, பக்கத்து மாநிலம் கொடுத்த 500 ரூபாயை ஏன் கேட்கணும்னு 700 ரூபாயா கேட்கிறாரோ?
அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை அறிக்கை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தி.மு.க., கூட்டணி சகா கம்யூ., அரசு கட்டும் அணை, கர்நாடக காங்கிரஸ் அரசு கட்ட முயலும் மேகதாது அணை குறித்த தி.மு.க., அரசின் கள்ள மவுனம் பற்றிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் கேள்விக்கு, அமைச்சர் துரைமுருகன் அளித்துள்ள பதிலின் முன்பு விளக்கெண்ணெயில் வதக்கிய வெண்டைக்காய் கூட தோற்றுவிடும்.
இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் இன்னைக்கு நேத்தா அவங்க பதில் கொடுக்குறாங்க... அதுல, பழம் தின்று கொட்டை போட்டவங்களாச்சே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி: பழைய மாமல்லபுரம் சாலையில், செம்மஞ்சேரியில் அரசு நிலத்தை பாதுகாக்க வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை, 50 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நிலங்களை வளைத்து, நில ஆக்கிரமிப்பு செய்யும், சட்ட விரோத கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உள்ளது.
அரசு அதிகாரிகளை தாக்கும்அளவுக்கு துணிச்சலும், தெனா வெட்டும் ஆளுங்கட்சியினரை தவிர, வேறு யாருக்கு வரும்?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஒண்ணு சேர்ந்தா அ.தி.மு.க.,வுக்கு எதிர்காலம். இல்லையென்றால் தி.மு.க.,வுக்கு எதிர்காலம். உதயகுமார் ஒன்றாகக் கூடாது என சொல்கிறார். அப்படியென்றால், அவரோட நோக்கம் என்ன? பழனிசாமியின் அரசியல் ஆலோசகர், முதல்வரை சந்தித்து 25 நிமிடங்கள் பேசினேன் என்கிறார். இதை முதல்வர் இந்த நிமிடம் வரை மறுக்கவில்லை. அவர் எதற்காக சந்தித்தார். எது குறித்து பேசினார். யாருக்காக பேசினார் என்பது தான் எல்லாரிடத்திலும் எழும் கேள்வி.
இப்படி குதர்க்கமாகவே குத்தி குத்தி பேசிட்டு இருந்தால், இந்த குரூப்பை அ.தி.மு.க.,வில் சேர்க்கணும்னு பழனிசாமி கனவு கூட காண மாட்டார்!

