PUBLISHED ON : மே 22, 2024 12:00 AM

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு
சீர்கெட்டுள்ளதற்கு நெல்லை காங்., மாவட்ட தலைவர் மரணமே சாட்சி. குறிப்பாக,
20நாட்களாகியும் வழக்கின் நிலை என்னவென தெரியாமல் உள்ளது. போலீசார் வழக்கு
குறித்து விசாரித்து உண்மை நிலையை உணர்த்த வேண்டும்.
ஆளுங்கட்சி
கூட்டணியில் இருப்பதால், ஜெயகுமார் மரண வழக்கு விசாரணையில் காங்கிரசார்
தான் அடக்கி வாசிக்கிறாங்க... நீங்களாவது பழைய பாசத்துல கிளறி விடுங்க!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஜூன் 4க்கு பிறகான தமிழக அரசியல், கி.மு., - கி.பி., என்பதாக சூழல் மாறக்கூடும். இரண்டு திராவிட இயக்கங்களுக்கு இடையிலான அரை நுாற்றாண்டு கால அதிகார அரசியல், ஒரு திராவிட கட்சிக்கும், ஒரு தேசிய கட்சிக்கும் என்பதாக உருமாற்றம் பெறும். இதை முறியடிக்கும் அளவுக்கு மூளையும், முதுகெலும்பும் இல்லாதவர்கள், அதிகபட்சமாக கூட்டணி சரணாகதி வழியே, அதிகாரப் பகிர்வு ஆட்சிக்கு உடன்பட்டு, பின்னாளில் மொத்தத்தையும் பறிகொடுக்கும் பரிதாபம் நிகழும்.
இப்படி ஜோசியக்காரர் மாதிரி, தினமும் எதிரிகளின் எதிர்காலத்தை கணிப்பதையே இவர் தொழிலா மாத்திக்கிட்டாரோ?
தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை பேச்சு: நம் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்த நம்மால், தமிழகத்துக்கு விடுதலை பெற்று தர முடியாதா? காங்., கட்சியை முதன்மை கட்சியாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் சீட்டுக்காக பிற கட்சிகளிடம் கேட்கும் நிலை மாறி, சீட்டை பிரித்துக் கொடுக்கும் இடத்தில் நாம் தான் இருக்க வேண்டும்.
'லெட்டர் பேடு' கட்சிகளை சேர்த்துக்கிட்டு கூட்டணிக்கு தலைமை வகித்தால், அடுத்த தேர்தலுக்கே சீட்டை இவர்கள் பிரித்து தரலாமே!
கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு பேட்டி: தமிழகம் முழுதும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத கோவில்கள் பலவற்றில், ஒரு கால பூஜை செய்யவும் வசதியற்ற நிலை உள்ளது. பூசாரிகளுக்கு சம்பளம் தர முடியாத சூழலில், ஏராளமான கிராமப்புற கோவில்கள் உள்ளன. இதுபோன்ற கோவில்களுக்கு, ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்துவதால், கிராம கோவில்கள் மேம்படும்.
வருமானத்துக்காக தான் ஆட்சியாளர்கள் கோவில்களை எல்லாம் விட்டு வச்சிருக்காங்க... இதுல, இவரோட கோரிக்கை ஏற்கப்படுமா?

