PUBLISHED ON : மே 20, 2024 12:00 AM

பா.ஜ., மூத்த தலைவர், ஹெச்.ராஜா பேட்டி:
'சவுக்கு' சங்கரை
கைது செய்த தமிழக அரசு, பிரதமரை தரக்குறைவாக பேசிய அமைச்சர் அன்பரசன் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் காட்டு தர்பார் ஆட்சி நடக்கிறது.
எந்த துறையும் சரியாக செயல்படவில்லை. தமிழக நிதி நிலை மிக மோசமாக உள்ளது.
இவர்கள், 300 போக்குவரத்து பணிமனைகளை அடகு வைத்து, 3,000 கோடி ரூபாய்
வாங்கி உள்ளனர்.
அவங்க போலீஸ், சவுக்கு சங்கரை, 'துாக்கிய' மாதிரி,
மத்திய விசாரணை அமைப்புகளை வச்சி அன்பரசனை, 'அள்ளி' இருக்கலாமே...
விட்டிட்டீங்களே, பயமா?
தமிழக, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு: கட்சிக்காக முன்வந்து பணியாற்றுவோரை அரவணைக்க நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. 'அவன் வந்தால் எனது இடம் காலியாகி விடும்; அவன் வர வேண்டாம்; வந்தால் எங்காவது ஒரு மூலையில் இருக்கட்டும்' என, நினைத்தால், கட்சி எப்படி வளரும்?
மத்தியில், காங்., தலைமையில் ஆட்சி அமைஞ்சிடும்... தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்திடலாம்னு கணக்கு போடுறாரா?
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி: கோவை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், போதை மருந்துகளை ஒழிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பஸ் டிரைவர்கள் மது அருந்தி பஸ்களை இயக்குவதை தடுக்க, உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளோம். மது அருந்தி வாகனம் ஓட்டினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பஸ் ஓட்டுனர்களும் மது அருந்தி, வாகனம் ஓட்டி பிடிபடுறாங்களே... அவங்களுக்கு, ஓனர்னு யாரை கூப்பிட்டு கூட்டம் நடத்துவீங்க ஆபீசர்?
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: திருப்பூர் மாவட்டம், உடுமலையில், 17 வயது சிறுமியை, ஒன்பது பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஜெயலலிதா ஆட்சியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அன்று தன்னை, பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கினார். தற்போது ஆட்சியில் இருந்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஜெயலலிதாவோ, உடுமலை சம்பவத்திற்கு ஸ்டாலினோ எப்படி பொறுப்பேற்க முடியும்... குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை தான் பெற்று தரணும்!

