PUBLISHED ON : மே 18, 2024 12:00 AM

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் பேட்டி: தமிழகத்தில்
போதை கலாசாரம் தலை துாக்கி ஆடுகிறது. கஞ்சா எளிதில் கிடைக்கிறது. தகாத
செயல்களுக்கு தன்னை மறக்க செய்வது மதுவும், கஞ்சாவும் தான். இதை தடுக்க
வேண்டிய அரசு, 'வீரன்' அரசாக உள்ளது. கடையில் வீரன் கொடு என்கின்றனர்.
'தினக்கூலி
தொழிலாளர்கள் வீரமா வேலை செய்யணும்னு தான், அந்த மாதிரி பெயரில் சரக்கு
விற்கிறோம்'னு அமைச்சர் முத்துசாமி சொன்னாலும் சொல்வாரோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: கட்சியை உடைத்து நாசமாக்கத்தான் ரகசியமாக பேசணும். ஒற்றுமைப்படுத்தி கட்சியை காப்பாற்ற வெளிப்படையாகவே பேசலாமே.... ஜூன் மாதம் வேகமாக வரக்கூடாது. பள்ளிக்கூடம் திறந்திடுவாங்க என புலம்பியது ஒரு காலம். இப்ப, எப்படா ஜூன் வரும் என காலண்டரை பார்த்து காத்து கிடக்கிறோம். எல்லாம் விதி.
இவர் சொல்ற மாதிரி, ஜூன் மாத வருகைக்காக காத்திருப்பவர்கள் எதிர்பார்த்தது நிஜத்தில் நடக்குமா, இல்ல புஸ் ஆகுமான்னு தெரியலையே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காட்டை சேர்ந்த சீனிவாசன் என்ற தனியார் நிதி நிறுவன ஊழியர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், மன உளைச்சல் அடைந்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10ல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு.
அரசுக்கு அந்த தீர்வு தெரியாமலா இருக்கும்... அப்பீல் எல்லாம் வீண் செலவுன்னு நினைக்கிறாங்களோ என்னமோ?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: பாடகி சுசித்ரா, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் நடத்தும், கேளிக்கை விருந்துகளில் போதை பொருள் அளிக்கப்படுவதாக கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. பெண் போலீசார் குறித்து பேசியதற்கு பேட்டி அளித்தவரையும், பேட்டி எடுத்தவரையும் கைது செய்த காவல் துறை, சுசித்ரா போதை பொருள் குறித்து பேசிய விஷயங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
கமல், ஆளுங்கட்சிக்கு ரொம்ப வேண்டப்பட்டவரா இருக்கிறதால, இவர் கேட்பது ஒரு காலமும் நடக்காது!

