PUBLISHED ON : மே 15, 2024 12:00 AM

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: பட்டாசு
தொழிலும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். விதிமுறைகளை
அமல்படுத்தும் கண்காணிப்பு அமைப்புகளில் நிலவும் ஊழலே இந்த விபத்துகளுக்கு
காரணம். விதிமீறல்களை கண்காணிக்க தவறிய அதிகாரிகளே விபத்துக்கு
பொறுப்பேற்கக் கூடியவர்கள் என்ற முடிவை மத்திய, மாநில அரசுகள் எடுக்க
வேண்டும்.
சுற்றுச்சூழலை கெடுக்கும் பட்டாசுகள் எதற்கு...?
தொழிற்பேட்டை உருவாக்கி, தொழிற்சாலைகளை பெருக்கினால் மக்களுக்கு மாற்று
வேலை கிடைக்குமே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மதத்தை தழுவி தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரை, மதச்சார்பற்றவர்களாக, சிறுபான்மையினராக புகழ்ந்து தள்ளும் அரசியல்வாதிகள் சிலர் உள்ளனர். இவர்கள் தான், சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை, மத ரீதியாக அடையாளப்படுத்தும், போலி மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தங்கள் மதத்திற்கு எதிரா பேசினாலும், அப்படி பேசுவோரை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் ஹிந்துக்கள் தான்உண்மையான மதச்சார்பற்றவர்கள்!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: வலைதளங்கள் வாய்மையை கொன்றுபோடும் கொலை களங்களாக மாறிவிட்டன. அவதுாறுகளின் நாற்றங்காலாகவும், லகான் இல்லாத வன்மங்களின் மோதல் திடலாகவும் உருமாறி, அச்சத்தை தருகின்றன. இவற்றை நெறிப்படுத்த, அவசியமான சட்டங்களையும், அத்துமீறல்களுக்கு கடுமையான தண்டனைகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்க வேண்டும். இல்லையெனில் சமூக பேரழிவுக்கான மூலப்பொருளாக அது மாறிவிடும்.
இப்ப மட்டும் கட்டுப்பாடும், தண்டனையும் இல்லாமலா இருக்கு... 'சவுக்கு' சங்கர் உதாரணம் போதாதா?
திருச்சி லோக்சபா தொகுதி ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ பேட்டி: முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற போது, 'இண்டியா' கூட்டணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. இரண்டாவது, மூன்றாவது கட்ட தேர்தல்களில், இந்த கூட்டணியின் வெற்றி முடிவாக தெரிந்து விட்டது. அதன் வெளிப்பாடு தான், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக பா.ஜ., கட்சியினரும், பிரதமரும் ஜாதி, மதத்தை வைத்து பேசி வருகின்றனர்.
அப்ப, திருச்சியில் இவரது வெற்றி உறுதியாகிடுச்சுன்னு அதீத நம்பிக்கையில் இருக்காரா?

