PUBLISHED ON : மே 14, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., சமூக ஊடக பிரிவு மாநில பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை:
திராவிட
கட்சிகளின் ஆட்சியால், தமிழகத்தில் வி.ஏ.ஓ., முதல் கலெக்டர் வரை,
தி.மு.க., - அ.தி.மு.க., என, இரு கூறாக பிரிந்து நிற்கின்றனர். இவர்கள்
இடையே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, ஒரு அமைப்பு உருவாகி உள்ளது. இது
முடிவுக்கு வர ஆன்மிக அரசியல் வர வேண்டும்.
அப்படி வந்தாலும், திராவிட பிரிவு, ஆன்மிக பிரிவுன்னு அதிகாரிகள் ரெண்டு கூறா பிரிஞ்சி அசத்திடுவாங்களே!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: ரேஷன் கடைகளில் அதிகாரிகள் நடத்தும் சோதனைகளின் போது, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறைவுக்காக,சம்பந்தப்பட்ட கடை ஊழியர்களிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை, அரசு இரு மடங்காக உயர்த்தி இருப்பதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. அபராத தொகையால் தங்கள் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை, அபராதத்திற்கே சென்று விடும் எனக்கூறி, தமிழக அரசு இந்த உத்தரவை திரும்ப பெற, ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை அரசு ஏற்க வேண்டும்.
மக்களுக்கு 1 கிராம் கூட ரேஷன் பொருள் அதிகமாக கிடைக்காது... அப்புறம் எப்படி எடை குறையுதாம்?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலால் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத்தொகை விபரங்களை சமர்ப்பிக்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ மாணவர்களை உருவாக்கும்பேராசிரியர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும் ஆணையத்தின் கடமை தான்.
இனி திராவிட மாடல் ஆட்சியாளர்களிடம் கேட்டு பிரயோஜனம் இல்லைன்னு, ஆணையத்திடம் போயிட்டாரோ?
பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் பேட்டி: காங்., கட்சியின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியர்களை பிளவுபடுத்தும் வகையில் நிறங்கள் குறித்த கருத்தை கூறியிருக்கிறார். அதை அவருடைய தனிப்பட்ட கருத்து என்று காங்., ஒதுக்கிவிட முடியாது. காங்., கட்சியும், ராகுலும் இந்திய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
அப்படி பார்த்தால், உங்க கட்சியின் சுப்பிரமணிய சுவாமி பேசுறதுக்கு எல்லாம், உங்க கட்சியின் தலைவர்கள் தினமும் மன்னிப்பு கேட்டுட்டே இருக்கணுமே!

