PUBLISHED ON : ஏப் 15, 2024 12:00 AM

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு:
மத்தியில்,
பா.ஜ., தலைமையிலான, 10 ஆண்டு ஆட்சியில் எந்த தேர்தல் வாக்குறுதிகளையும்
நிறைவேற்றவில்லை. ஆனால், தமிழகத்தில் இரண்டரை ஆண்டு, தி.மு.க., ஆட்சியில்,
௮௦ சதவீத வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். 'இல்லம் தேடி கல்வி,
மக்களை தேடி மருத்துவம், புதுமைப்பெண் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை
உணவுத்திட்டம், பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்ப தலைவிக்கு
உரிமைத் தொகை' என பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
இவர்,
ஆளுங்கட்சிக்கு அடிக்கிற, 'ஜால்ரா'வை பார்த்து, எங்க, தி.மு.க.,வில்
சேர்ந்துடுவாரோன்னு தான் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியே
கொடுத்திருப்பாங்களோன்னு தோணுது!
பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு: மது விலக்கு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் உள் ஒதுக்கீடு உட்பட, 10 கோரிக்கைகளை முன்வைத்து, 2019ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தும் எதையும் நிறைவேற்றவில்லை. வன்னியர் உள் ஒதுக்கீடு நீதிமன்றத்தில் ரத்தாகும் என தெரிந்தே, கடைசியில் அவசரமாக, பெயரளவில் சட்டம் போட்டு, வன்னியர்களுக்கு பழனிசாமி துரோகம் செய்துவிட்டார்.
இதெல்லாம் சில வாரங்களுக்கு முன் வரை, அ.தி.மு.க.,வின், சி.வி.சண்முகம் கூட்டணி பேசுறதுக்காக, தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து போனப்ப தெரியலையோ?
தி.மு.க., செய்தி தொடர்பு துணை செயலர் கோவை செல்வராஜ் பேட்டி: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக, 30 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பயன் அடைந்துள்ளனர். 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில், 24 லட்சம் பள்ளி குழந்தைகளும், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் வாயிலாக ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்களும் பயன் அடைந்துள்ளனர்.
இதெல்லாம் உண்மை என்றால், இணையதளத்தில் பயனாளிகளின் பட்டியலை, ஆதார் விபரத்துடன் வெளியிட முடியுமா?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு: போதைப் பொருட்களை இறக்குமதி செய்து, இளைஞர்களை கெடுத்து, அவர்களின் திறமையை அழித்து, மண்ணோடு மண்ணாக புதைப்பது தான், தி.மு.க., அரசின் வேலை. நடராஜர் மீது சத்தியம் செய்து சொல்கிறேன்; நம் மக்களை அழிக்கும், போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அழிந்து போவர்.
அதற்கு முன், போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அழிந்து போயிடுவாங்க... சாபம் விடுறதுக்கு பதிலா, மத்திய அமைச்சரா யோசித்து, போதைப்பொருட்களை ஒழிக்க ஏதாவது செய்யலாம்!

