PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: 'இண்டியா'
கூட்டணி, மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும்,
இரண்டாம் இடத்துக்கு தான் போட்டி போடுகின்றன. அதிலும், அ.தி.மு.க., பல
கூறுகளாக பிரிந்துள்ளது. இதனால் தேர்தல் தோல்வி, அவர்களுக்கு பெரும்
பின்னடைவாக இருக்கும்.
'இண்டியா' கூட்டணியில இருக்கிற காங்., - கம்யூ.,க்கள்ல, கேரளாவுல எந்த கட்சிக்கு மக்களிடம் வரவேற்பு இருக்குன்னு இவர் சொல்வாரா?
தமிழக அரசின் பாடநுால் வாரிய முன்னாள் தலைவர் லியாகத் அலிகான் பேச்சு: மத்தியில், 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைத்த பின் அரசு ஊழியர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மத்தியில் கூட்டணி ஆட்சிக்கு பிரதமராக ராகுலும், துணை பிரதமராக ஸ்டாலினும் பதவி ஏற்பர். இருவருக்கும், மத்தியில் ஆட்சி அமைக்கும் யோகம் இருக்கிறது.
'ஸ்டாலின் மீது இவருக்கு என்ன கோபம்னு தெரியலையே... தமிழகத்துல இருந்து அவரை, 'பேக்' பண்ண பார்க்கிறாரே!
பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை: வாரிசு அரசியலில் கூட பெண்களை புறக்கணிப்பது தான் திராவிட மாடல். கருணாநிதிக்கு இரு மகள்கள் இருந்தும், அரசியலில் இருக்கும் மகன் ஸ்டாலின் தான் அடுத்த வாரிசாக முடிசூட்டப்பட்டார். ஸ்டாலினுக்கு, மகள் இருந்தும் மகன் உதயநிதி தான் இளவரசராக முடிசூட்டப்பட்டு, அமைச்சராக்கப்பட்டு உள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு, உண்மையிலேயே பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற அக்கறை இருந்தால், அமைச்சரவையில் குறைந்தது, 10 பெண்களை நியமிக்க வேண்டும்.
இவங்க சொல்றதை யார், எப்படி எடுத்துக்கிட்டாலும், இப்ப இருக்கிற தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,க்கள் கண்டிப்பா ரசிப்பாங்க!
தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி: தமிழகத்தில் கள நிலவரம் பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது. நாடு முழுதும்மோடிக்கு ஆதரவான நிலையே உள்ளது. பத்தாண்டுகளில் பா.ஜ., ஒரு ஊழல் கூட இல்லாமல், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்கியது. ஆனால், 2004 - 2014ம் ஆண்டு வரை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஊழல் நிறைந்திருந்தது.
இவங்க ஆட்சி முடிந்து, அடுத்தவங்க வந்து கிளறினால் தானே, எங்கேயாச்சும் தப்பு தண்டா நடந்திருக்கான்னு தெரியும்!

