PUBLISHED ON : ஏப் 08, 2024 12:00 AM

தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு:
கடந்த, காங்., கூட்டணி
ஆட்சியில், ஒரு மாதம் கழித்து தான், மன்மோகன் சிங்கை பிரதமர் என
அறிவித்தனர். தற்போதுள்ள, 'இண்டியா' கூட்டணியிலும், பிரதமர் யார் என்று
தெரியாத நிலை தான் உள்ளது. பொண்ணும், மாப்பிள்ளையும் பார்க்காமல் திருமணம்
செய்து கொண்டு, பின், முகத்தை காட்டுவது போல, காங்., கூட்டணியான, 'இண்டியா'
கூட்டணி உள்ளது.
அவங்க கூட்டணியை பொறுத்த வரை, பெண்ணும்,
மாப்பிள்ளையும் பார்த்துவிட்டால், திருமணத்திற்கு முன்பே விவாகரத்து
வரைக்கும் போய் விடுமே... அதனால, பாவம் என்ன செய்வாங்க?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: அ.தி.மு.க.,வுக்கு, பா.ம.க., துரோகம் செய்து விட்டது என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறி வருகிறார். நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம். பழனிசாமியை முதல்வராக தொடர வைத்தது நாங்கள் தான். பா.ம.க.,வை, அ.தி.மு.க.,விடம் எழுதி கொடுக்கவில்லை. மது ஒழிப்பு, இட ஒதுக்கீடுன்னு ஒவ்வொரு விஷயத்துக்கும், அ.தி.மு.க.,விடம் கெஞ்ச வேண்டி இருந்தது.
அதானே... ஒவ்வொரு தேர்தலிலும், மாறி மாறி கூட்டணி வைப்பது தானே இவங்க வழக்கம்... ஒரே கூட்டணி என்பது, பா.ம.க.,வில் இதுவரையும் இல்லை; இனிமேலும் இல்லைனு சொல்றாரா?
தமிழக காங்கிரஸ், எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் அறிக்கை: ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடத்தப்படும் என்றால், அது தேர்தல் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல். தேர்தலை நேர்மையாக நடத்த நினைத்தால், ஒவ்வொரு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடனும் ஒப்புகை சீட்டை இணைக்க வேண்டும். அப்போது தான் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்கும் என்று அர்த்தம். இதற்கு, உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என, நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
அப்ப, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்ததே... அதிலும் இவங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
தமிழக, பா.ஜ., மேலிட இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி: பிரதமர் மோடியின் சாதனைகளை சிவகங்கை மக்கள் நினைவில் கொண்டுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிலவும் குடும்ப அரசியலை அழிப்பதற்கு மோடி போராடி வருகிறார்.
குடும்ப அரசியல் நாடு முழுதும் இருக்கு... விலைவாசி உயர்வும் நாடு முழுதும் இருக்கு... மக்கள் எதை முதலில் கட்டுப்படுத்தணும்னு எதிர்பார்ப்பாங்க?

