PUBLISHED ON : ஏப் 05, 2024 12:00 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: பா.ஜ., -
அ.தி.மு.க., கொள்கை ரீதியாக பிரிந்து செல்லவில்லை. ஒரு அந்தரங்க
உடன்பாட்டின் அடிப்படையில் தான் பிரிந்து இருப்பது போல் தோற்றத்தை
ஏற்படுத்துகின்றனர் நாளையே அ.தி.மு.க.,வில் சிலர் வெற்றி பெற்றாலும்,
பா.ஜ.,வுக்கு ஆதரவு தருவர். எனவே, பா.ஜ., ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும்
என்பது, ஜனநாயகத்தின் கடமையாக இருக்கிறது.
'நாளை நமதே; 40ம் நமதே'
என்று, இவங்க கூட்டணி தலைவர் ஸ்டாலின் சொல்றார்... இவர், அ.தி.மு.க.,வினர்
சிலர் வெற்றி பெற்றால்னு இழுக்கிறாரே... 100சதவீத வெற்றியில் இவருக்கு
நம்பிக்கை இல்லையோ?
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 2014-ம் ஆண்டில், 609வது இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்? பிரதமர் மோடி ஆட்சியால் கார்ப்பரேட்டுகள் பயனடைந்தனர். தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் வாயிலாக, 6,572 கோடி ரூபாய் குவித்த பிரதமர் மோடி, ஊழலை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.
அதே தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, இவரது காங்., கட்சியும் 1,000 கோடிக்கு மேல வசூல் பண்ணியிருக்குதே... அதுவும் ஊழல் கட்சின்னு ஒப்புக்குறாரா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: கொரோனா காலத்தில், ஆந்திரா, தெலுங்கானா அரசுகள், அரசு ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே கொடுத்தன. கேரள அரசு, மாதா மாதம் ஒரு வார சம்பளத் தொகையை பிடித்தம் செய்தது. ஆனால், ஆண்டு முழுதும் அந்த கால கட்டத்தில் அரசு அலுவலர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், முழு சம்பளம் கொடுத்தது, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு மட்டுமே.
அப்படி வாரி வாரி கொடுத்து தான், அரசு கஜானாவை காலி பண்ணிட்டு போயிட்டீங்க... இப்ப, அரசு ஊழியர்களுக்கு எந்த சலுகையும் தர முடியாம தி.மு.க., அரசு தவிக்குது!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் பேச்சு: பிள்ளையார்பட்டி சென்று கற்பக மூர்த்தியாரை கைகூப்பி வணங்கிவிட்டு வெளியில் வந்தபோது, கண் குளிர கண்டேன். குளம் எங்கும் தண்ணீரே தெரியாத அளவுக்கு, தாமரை மலர்ந்திருந்தது. ஆம் பிள்ளையார் விரும்புவதை, சிவகங்கை சீமையில் பிசகாமல் செய்து முடிப்போம்.
குளத்துல வேணும்னா தாமரைகள் மலரலாம்... தேர்தல் களத்தில் மலருமா?

