PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM

தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா பேச்சு: அ.தி.மு.க., -
தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., ஆகிய கூட்டணியில் உள்ள கட்சிகளின் பெயர்கள்
நான்கெழுத்தில் உள்ளன. தேர்தல் முடிவும் ஜூன் 4ல் வருகிறது. ஆகையால், இந்த
கூட்டணி தான் வெற்றி கூட்டணி.
அஜித் நடித்த ஒரு படத்தில், 'கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும்'னு காமெடி பண்ணுவார்... அந்த மாதிரிதான் இருக்கு இவங்க லாஜிக்கும்!
ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா அறிக்கை: ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்கள் வரும் 19ம் தேதி, சர்வாதிகார பாசிச சக்திகளுக்கு விடை கொடுப்பர். நாட்டை பாதுகாக்க, 'இண்டியா' கூட்டணி கட்சிகளுக்கு கடமையாற்ற களத்திற்கு வருவர். இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் அடுத்து ஐந்தாண்டுகளுக்கு, அதாவது, 1,825 நாட்கள் வாக்காளர்கள் காத்திருக்க வேண்டும்.
ஆமா... அது மட்டுமில்லாம, அடுத்த தேர்தலில் ம.தி.மு.க., இருக்குமா... அப்படியே இருந்தாலும், இப்ப கிடைச்ச மாதிரி கூட்டணியில் ஒரு சீட்டாவது கிடைக்குமான்னும் தெரியாது!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குருராஜன் என்ற பொறியாளர், 'ஆன்லைன் ரம்மி'யில் பெருமளவில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு. உச்ச நீதிமன்ற வழக்கை விரைவாக முடித்து ஆன்லைன் ரம்மிக்கு தடை பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதெல்லாம் எதற்கு...? பா.ஜ., கூட்டணியில் முக்கியமான கட்சி ஆகிட்டீங்க... மோடியிடம் ஒரு வார்த்தை சொல்லி, ஆன்லைன் ரம்மிக்கு ஒட்டுமொத்தமா தடை போட்ருங்க!
தமிழக காங்., சிறுபான்மையினர்துறை ஒருங்கிணைப்பாளர் முகமது இஸ்மாயில் அறிக்கை: காங்கிரஸ் கட்சிக்கு விழக்கூடிய மொத்த ஓட்டு வங்கியில், 20 சதவீதம் இஸ்லாமியர் ஓட்டுகள் உள்ளன. ஆனால், கட்சியில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. 2019 தேர்தல், தற்போதைய தேர்தலில் ஒரு இஸ்லாமியர் கூட வேட்பாளராகவில்லை என்பது மனக் குமுறலாக உள்ளது.
காங்கிரஸ் மட்டும் தானா... முஸ்லிம் ஓட்டுகளை அப்படியே அள்ள துடிக்கும் தி.மு.க.,வில் மட்டும் எத்தனை முஸ்லிம் வேட்பாளர்கள் இருக்காங்களாம்?

