PUBLISHED ON : ஏப் 03, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில் லோக்சபா தேர்தல்
முடிந்த பிறகு மின்சார நுகர்வோரிடமிருந்து கூடுதல் வைப்பு தொகை வசூலிக்க
மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள
நிலையில், கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பது கண்டிக்கத்தக்கது.
'விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை தருவோம்'னு வாக்குறுதி கொடுக்குறாங்களே... அதன் பின்னணியில் வைப்பு தொகை விவகாரம் இருக்குமோ?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: இந்தியாவில் தான் உலக பணக்காரர்கள் உள்ளனர். அதே இந்தியாவில் தான் 28 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தவிக்கின்றனர். அரசியல் மாற்றம் என்றால், லஞ்சம் வாங்கும் அதிகாரி பணியிட மாற்றமல்ல; பணி நீக்கம் செய்வது. தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நீண்ட கால சின்னத்தை பார்க்காமல், நல்லவர்கள் எண்ணத்தை பாருங்கள்.
சின்னத்தையும், எண்ணத்தை யும் பார்த்த காலமெல்லாம் மலையேறி போச்சே... இப்ப தான் கையில காசு; வாங்கிக்கோ ஓட்டுன்னு மக்கள் மாறிட்டாங்களே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: சில தீய சக்திகளும், கூலிப்படைகளும், மோசடி, வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றங்களில் ஈடுபட்டால், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்க துறைகளை மத்திய அரசு பயன்படுத்தியே தீரும். முதல்வர்களே ஆனாலும் கைது நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
இவர் சொல்ற மாதிரி விசாரணை அமைப்புகள் நேர்மையாக நடவடிக்கை எடுத்தால், நாட்டில் உள்ள மாநிலங்களில் முக்கால்வாசி முதல்வர்கள் ஜெயில்ல தான் இருப்பர்!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து, வீடியோ வாயிலாக மகளிர் பாராட்டு தெரிவித்துள்ளதாக முதல்வர் பெருமையாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் டாக்டர் விவேகானந்தன் கொரோனாவில் பணியாற்றி இறந்த நிலையில், அவரது மனைவி, அரசு பணி கேட்டு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பின்னரும் முதல்வர் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்பது தான் வருத்தம்.
பாராட்டு வீடியோ மாதிரி மனக்குமுறல் வீடியோ, கடித மெல்லாம் முதல்வருக்கு வந்துட்டு தான் இருக்கும்... அதெல்லாம் வெளியே கசிய விடுவாங்களா?

