PUBLISHED ON : ஏப் 02, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு:
பெரம்பலுார் லோக்சபா தொகுதி
இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், கடந்த முறை 6 லட்சம் ஓட்டுகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது போல, இந்த முறையும் அவருக்கு நீங்கள்
ஓட்டளிக்க வேண்டும். ஐந்தாண்டு எம்.பி., நிதி முழுதையும் செலவு செய்தது
மட்டுமின்றி, தன் சொந்த நிதி பல நுாறு கோடிகளை மக்களுக்காகவும், ஏழை, எளிய
மாணவர்களின் கல்விக்காகவும் செலவு செய்துள்ளார்.
அவர் 6 லட்சம்
ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சப்ப தி.மு.க., கூட்டணியில், உதயசூரியன்
சின்னத்தில் போட்டியிட்டார்... இப்ப அது சாத்தியப்படுமா?
தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா பேச்சு: ஜாதி, மத, மொழி, இனத்துக்கு அப்பாற்பட்டு அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி உள்ளது. எதிரணியில் பலர் இருக்கின்றனர். ஆனால், எங்கள் கூட்டணியில் நான்கு கட்சிகள் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. நாளை சரித்திரம் படைக்கும் கூட்டணி.
லோக்சபா தேர்தலில் உங்க கூட்டணி சரித்திரம் படைக்குதோ இல்லையோ... டிபாசிட்டை தக்கவச்சாலே, பெரிய சாதனை தான்!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'முதல்வர் ஸ்டாலின், எங்களை போன்றவர்களை அடக்கி வாசிக்க சொல்வதால் தான், அண்ணாமலை போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்' என, அமைச்சர் சேகர்பாபு பேசி உள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். அடக்கி வாசிக்காமல், அடங்க மறுத்து துள்ளி குதித்தால் அமுக்கி விடுவர் என்று...!
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி என்னடான்னா, 'மற்ற மாநில முதல்வர்களை கைது செய்யுறீங்க... எங்க முதல்வரை தொட்டு பாருங்க'ன்னு சொன்னாரு... இப்ப சேகர்பாபு கோர்த்து விடுறாரு... முதல்வருக்கு எதிரிகள் வெளியில இல்லை!
நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜா பேச்சு: 'நீலகிரி தொகுதி நன்றாக இருக்க வேண்டுமெனில் என்னை பார்லிமென்ட் அனுப்புங்கள்' என கேட்டால், நான் சுயநலவாதி; அந்த பதவி இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று சொன்னால், என்னை விட அயோக்கியன் இருக்க முடியாது. ஆனால், இப்போது பிரச்னை ராஜா அல்ல. நீலகிரி எம்.பி., யார் என்பதும் அல்ல. இந்தியாவை யார் ஆளக்கூடாது என்பது தான்.
நீலகிரி தொகுதி மக்கள், தன் மீது கடுப்பா இருக்காங்கன்னு தெரிஞ்சு தான், இப்படி மாத்தி யோசித்து ஓட்டு கேட்கிறாரோ?

